புதிய அரசியலமைப்பு தொடர்பில் சகல பெளத்த பீடங்களும் எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளன. இவ்வாறான நிலையில் பலாத்காரமான முறையில் அதனைத் திணிப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. எனினும் தேரர்களின் ஆலோசனைகளுக்கு செவிசாய்க்காத அரசாங்கத்தால் நீண்ட காலத்திற்கு பயணிக்க முடியாதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். மறைந்த பேராசிரியர் நாகொட அமரவங்ச தேரரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மருதானையிலுள்ள வித்யாலீய விகாரைக்கு நேற்று சென்றிருந்தார்.
அதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், தேர்தல் நடத்தும் திகதி பற்றி அமைச்சர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு திகதிகளைக் குறிப்பிடுகின்றனர். எனினும் அரசாங்கம் தேர்தலை எப்போது நடத்தினாலும் அதனை எதிர்கொள்வதற்கு நாம் தயாராக உள்ளோம். அத்துடன் நாம் தேர்தலில் பாரிய வெற்றியடைவோம். மேலும் தேர்தலில் தோல்வியைத் தழுவவேண்டி வரும் என்கின்ற அச்சம் அரசாங்கத்திற்கு உள்ளது. அதனாலேயே தேர்தலை நடத்தாது காலம் தாழ்த்தி வருகிறது.
மேலும் அரசாங்கம் கொண்டுவருவதற்கு எத்தணித்துள்ள புதிய அரசியலமைப்பிற்கு சகல பெளத்த பீடங்களும் எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளன. புதிய அரசியலமைப்பு குறித்து அவதானமாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கத்தோலிக்க சங்கமும் தெரிவித்துள்ளது. நல்லிணக்கம் ஏற்படுத்துவதனை அடிப்படையாகக் கொண்டே அதிகாரப் பகிர்விற்கு முயற்சிப்பதாக அரசாங்கங்கம் தெரிவிக்கிறது. எனினும் அதிகாரப் பகிர்வு குறித்து சகல தரப்பிலும் தற்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது.எனவே அரசாங்கம் பலாத்காரமான முறையில் புதிய அரசியலமைப்பு கொண்டு வருவதன் மூலம் நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுமா? என்கின்ற சந்தேகம் உள்ளது. மேலும் தேரர்களின் ஆலோசனைகளை செவிமடுக்காத அரசாங்கத்தால் நீண்ட காலத்திற்கு பயணிக்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.