நியுயோர்க் தொடர் வாகன விபத்தில் மூவர் உயிரிழப்பு : 9 பேர் காயம்
அமெரிக்காவின் நியுயோர்க் நகரில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற தொடர் வாகன விபத்தினால் மூவர் உயிரிழந்துள்ளதுடன், குறைந்தது ஒன்பது பேர் காயமடைந்தள்ளனர். இந்த விபத்து குயின்ஸ் பெருநகரில் உள்ள Long Island நெடுஞ்சாலையில் இடம்பெற்றுள்ளது.
நெடுஞ்சாலையில் பயணம் செய்துகொண்டிருந்த பெரிய சரக்கு ட்ரக் வாகனமொன்று இரண்டு வாகனங்களில் மோதியுள்ளன. இதன் காரணமாக அங்குள்ள பல வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியதனாலேயே இந்த தொடர் விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தைத் தொடர்ந்து காயமடைந்தவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்த நெடுஞ்சாலை சிலமணி நேரத்திற்கு மூடப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியால் பயணம் மேற்கொள்ளவிருந்த அதிகமான வாகனங்களின் போக்குவரத்திற்கு தடங்கல் ஏற்பட்டுள்ளது. எனினும் பாதை பின்னர் திறக்கப்பட்டு, மீண்டும் போக்குவரத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பிலான விசாரணைகளை நியுயோர்க் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். விபத்துக்குள்ளான வாகனங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.