நாளை சசிகலாவின் தீர்ப்பிற்குப் பின்னர் நடக்கவிருப்பது என்ன? தமிழகத்தை கலக்கும் பதற்றம்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னர் ஏற்பட்டிருந்த அரசியல் வெற்றிடத்தின் நீட்சியும், இன்று எழுந்துள்ள அரசியல் சலசலப்பிற்கும் நாளை முடிவு கிடைக்கலாம் என்கின்றன தமிழக அரசியல் வட்டாரங்கள்.
சொத்துக்குவிப்பு மீதான வழக்கின் தீர்ப்பு நாளைய தினம் உச்ச நீதிமன்றத்தினால் வழங்கப்படவுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உட்பட்ட நால்வருக்கு எதிராக சொத்துக் குவிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இதனையடுத்து குறித்த நான்கு பேரும் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனாலும், தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நான்கு பேரும் மேல்முறையீடு செய்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி அவர்களை விடுதலை செய்து தீர்ப்பளித்தார். எனினும், இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்நிலையில் மேன்முறையீடு செய்யப்பட்ட வழக்கில் அனைத்து தரப்பினரின் வாதம் முடிவடைந்த நிலையில், நாளைய தினம் பத்தரை மணிக்கு தீர்ப்பு வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேன்முறையீடு செய்யப்பட்ட வழக்கில் சசிகலாவிற்கு எதிரான முடிவுகள் அநேகமாக வெளியாகலாம் என பரவலாகப் பேசப்படுகின்றது.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயா, சசிக்கு தொடர்பு உண்டு என்றாலும், இப்பொழுது ஜெயலலிதா உயிருடன் இல்லை என்பதால் சசிகலா தண்டனை அனுபவிக்க வேண்டி வரும் என்கிறார்கள் சட்ட ஆலோசகர்கள்.
இதற்கிடையில், சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டு தன்னுடைய பலத்தை நிரூபித்து தமிழக முதலமைச்சராவேன்னு என்று கருத்துரைத்துவரும் சசிகலா, சட்டமன்ற உறுப்பினர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்று குற்றச்சாட்டுக்கள் மேலெழுந்திருக்கின்றன.
ஆனால், தாம் யாருடைய வற்புறுத்தலும் இன்றியே தங்கியிருப்பதாகவும், தங்களுடைய ஆதரவு சசிகலாவிற்கு என்கிறார்கள் சட்டமன்ற உறுப்பினர்கள்.
இருப்பினும் நாளைய தினம் சசிகலாவிற்கு எதிரான தீர்ப்பு வெளியானால், மீதமுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவான முடிவினை எடுப்பார்கள் என்று தெரியவருகிறது.
எனினும், தனக்கு சாதகமாக தீர்ப்பு ஏதேனும் வெளியானால், அடுத்த கட்ட முடிவு குறித்து சசிதரப்பு நீண்ட ஆலோசனையில் ஈடுபட்டுவருகிறது.
இது இவ்வாறிருக்க, சசிகலா தரப்பு மூன்று முக்கியமான முடிவில் இருக்கிறதாம். அதாவது, ஒன்று சசிகலா முதல்வராவது, இரண்டாவது சசிகலா சொல்லும் நபர் முதல்வராக பதவியேற்பது.
தற்போதுள்ள சூழலில், கட்சியின் மூத்த உறுப்பினர் யாரையாவது முன்னிறுத்தலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார் சசிகலா. ஆனால் அவரின் இந்த முடிவிற்கு சசிகலாவின் கணவர் நடராஜன் எதிர்ப்பு தெரிவிக்கிறார்.
அடுத்த முதல்வர் ரேஸில் கட்சியின் அவைத் தலைவரான செங்கோட்டையனை முன்னிறுத்தினால், பன்னீர்செல்வம் எதிர்ப்புக் குரல் அடங்கிப் போகும் என்பது அவருடைய எண்ணம்.
எம்.ஜி.ஆர் காலத்து அரசியல்வாதி என்ற தோற்றமும் குற்றச்சாட்டுகளில் அடிபடாதவர் என்ற பிம்பமும் இருக்கிறது. கட்சித் தொண்டர்களும் செங்கோட்டையனை ஏற்றுக் கொள்வார்கள் என உறுதியாக நம்புகிறார்.
ஆனால், சசிகலாவிற்கு தீர்ப்பு சாதமாக வருமேயானால் அவர் தன்னுடைய சட்டமன்ற பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியமைப்பார் என்ற அச்சமும் மத்திய அரசிடம் இருக்கிறது.
ஒருவேளை சசிகலாவிற்கு தீர்ப்பு சாதகமாகி அவர் ஆட்சியமைக்கும் நிலை ஏற்பட்டால், தமிழக அரசாங்கத்தைக் கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது என்ற முடிவும் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இதில் மத்திய அரசாங்கத்திற்கு ஏதோவொரு வகையில் ஆபத்து இருப்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். தமிழகத்தில் இப்பொழுது அதிமுகவிற்கு சரியான தலைமைத்துவம் கிடையாது.
இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, ஆளும் பாரதிய ஜனாதா கட்சி தன்னுடைய செல்வாக்கை தமிழகத்திற்குள் ஏற்படுத்த கடும்பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இதற்கு சசிகலா முட்டுக்கட்டையாக வருவதை அவர்கள் விரும்பவில்லை. ஆனாலும், ஆட்சியைக் கலைத்து ஜனாதிபதி ஆட்சிமுறை கொண்டுவரப்பட்டு பின்னர் சட்டசபை தேர்தல் நடைபெற்றால், அதில் திமுக வெற்றி பெறுவது உறுதியாகின்றது.
தமிழக மக்களின் மனங்களில் இப்பொழுது அதிமுக மீதான வெறுப்பினை உணரமுடிகின்றது. இதனை நிச்சயம் திமுகவிற்கு சாதகமான முடிவினை எடுக்க வைக்கும்.
ஸ்டாலின் தலைமையிலான திமுக மத்தியில் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணியில் இருக்கிறது. இதனால் தமிழகத்தின் வாய்ப்பு கைநழுவிப் போய்விடும்.
இவ்வாறான சூழ்நிலையில் அதிமுகவின் ஆட்சி நீடிப்பதையே மோடி அரசாங்கம் விரும்புகிறது. ஒருவேளை சசிக்கு தீர்ப்பு வரும்பட்சத்தில் மத்திய அரசாங்கம் சசிதரப்போடும் பேரம் பேசுவதிலும் ஈடுபடலாம்.
நாளை வெளியாகும் தீர்ப்பின் முடிவுகள் தமிழக கட்சிகளுக்கு மாத்திரமல்ல, ஆளும் பாரதிய ஜனாதா கட்சிக்கும் மிகமுக்கியமான முடிவுகள் தான்.
சசிகலா முதலமைச்சராவாரா? இல்லை பன்னீர் முதலமைச்சர் பதவியில் நீடிப்பாரா என்பதை விட, மோடிக்கு தமிழகத்தில் நினைத்ததை நடத்த இடைவெளி கிடைக்குமா என்பதே பெரிய கேள்வியாகவிருக்கிறது