தனது கிரிக்கெட் வாழ்வில் ஓய்வின்றி தொடர்ச்சியாக ஆடிய போது பணிச்சுமையை நிர்வகிக்க முடியாமல் திணறிய போது உதவி கேட்டேன் என்றும் தனக்கு அவ்வுதவி கிடைக்கவில்லை என்றும் இடது கை வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியில் நுழைய நீண்ட காலமாக காயங்களுடன் போராடிவரும் இர்பான் பதான் தனது பணி நேர்மை, உழைப்பு, இடைவிடாத கிரிக்கெட் ஆட்டம் பற்றி ஈ.எஸ்.பி.என் கிரிக் இன்போ இணையதளத்திற்கு அளித்துள்ள விரிவான பேட்டியில் கூறியுள்ளார். இர்பான் பத்தான் சர்வதேச கிரிக்கெட் ஆடி 5 ஆண்டுகள் ஆகிவிட்டன. கராச்ச்சி ஹாட்ரிக், பெர்த் ஆட்ட நாயகன் விருது ஜொஹான்னஸ்பர்கில் உலக டி20 இறுதிப் போட்டி என்று இர்பான் பத்தானின் நினைவுகளை மறக்க முடியுமா?
அவர் கூறியதிலிருந்து…
நான் மறக்க நினைத்தாலும் என் ரசிகர்கள் என்னை மறக்க விடமாட்டேன் என்கிறார்கள். இது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதுதான் இன்னமும் என்னை நம்பிக்கையுடன் ஆடச்செய்து வருகிறது.
நடப்பு ரஞ்சி சீசன் எனக்கு மிக மிக முக்கியமானது, நான் ஐஸ் மீது நிற்கிறேன் என்பதை நான் அறிவேன்.
நான் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் ஆடினேன், நாங்கள் தோற்றோம், உடனே அந்த இரவே விமானத்தில் இந்தியா திரும்பினோம். இரண்டு நாள் இடைவெளியில் இங்கிலாந்துக்கு எதிராக 3 நாள் போட்டியில் ஆடினேன். கடைசி நாளன்று பரோடாவுக்கு விமானத்தில் சென்றேன். சென்றது முதல் கர்நாடகாவுக்கு எதிராக ரஞ்சி டிராபி கிரிக்கெட், நான் அந்தப் போட்டியில் சதம் அடித்தேன். 20 ஓவர்களுக்கு மேல் ஒரு இன்னிங்சில் வீசினேன். எனவே 9 நாட்கள் தொடர்ச்சியாக ஆடியிருக்கிறேன்.
என் முழங்கால் பிரச்சினை கொடுத்தது, எலும்பு முறிவில் சிக்கினேன். எனவே 10 நாளில் வெளிநாட்டில் டி20 போட்டியில் ஆடினேன். ஜெட் லாக் இருந்தும் இங்கிலாந்துக்கு எதிராக 3 நாள் போட்டியில் ஆடினேன். 20 ஓவர்கள் வீசியிருக்கிறேன். பிறகு விமானம் மீண்டும் ரஞ்சி டிராபி கடைசி நாளில் காயமடைந்தேன். யார் விளையாடுவார்கள்? முதல் தர கிரிக்கெட்டில் 7 நாட்கள் தொடர்ச்சியாக ஆடியுள்ளேன். இதுதான் என் அர்ப்பணிப்பு உணர்வு, ஆனால் துரதிர்ஷ்டவசமாக காயமடைந்தேன்.
நான் குறைந்த அளவில் முதல் தர கிரிக்கெட்டில் ஆடுகிறேன் என்று சிலர் என்னைப் பற்றி எழுதுவது சுலபம். நான் இதைப்பற்றியெல்லாம் பேசியதில்லை. நான் காயமடைவதற்கு முன்பாக இதுதான் நடந்தது. ஆற்றலைப் பொறுத்தவரை என்னை பவர் ஹவுஸ் என்றுதான் அழைப்பார்கள். நாள் முழுதும் கடுமையாக ஆடுவேன், எனவே ஆற்றல் பற்றிய பிரச்சினையே இல்லை. ஆனால் பணிச்சுமையை நிர்வகிப்பது எனக்கு கடினமாக இருந்தது. சில வேளைகளில் நான் அதீதமாக விளையாடினேன், பயிற்சிகள் செய்தேன். இதுதான் பிரச்சினை, இதற்காக நான் உதவி கேட்டேன், எனக்கு உதவி தேவைப்பட்டது, நான் கேட்டேன், ஆனால் எனக்கு உதவி கிடைக்கவில்லை.
காயமடைவதற்கு முந்தைய எனது கடைசி போட்டியில் நான் ஆட்டநாயகன். நான் காயமடைந்தேன், டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் ஆட வேண்டும் என்ற அவா என்னை உந்தியது. நான் ஏன் இப்படி 7 நாட்கள், 9 நாட்கள் என்று தொடர்ச்சியாக ஆட வேண்டும்? பதில் கிடைத்தது, டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் ஆட வேண்டுமென்றால் ஆடித்தான் ஆகவேண்டும். அதனால்தான் ஆடினேன், ஆடிக்கொண்டிருக்கிறேன், சில வேளைகளில் என்ன நடந்தது, நடக்கிறது என்ற உண்மைகளை அறியாமல் சிலர் என்னைப் பற்றி கருத்துக் கூறுகின்றனர்.
இவ்வாறு கூறினார் இர்பான் பதான்.