தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இரண்டு மிகப்பெரிய தோல்விகளைச் சந்தித்ததோடு மனரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் வெளிப்படையான பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
அணி நன்றாக ஆடும்போது, அதற்கான பெருமை முழுதையும் அணி நிர்வாகம் தட்டிச் செல்கிறது. ஆனால் நன்றாக ஆடாத போது பழி அத்தனையும் கேப்டன் மீது சுமத்தப்படுகிறது. ஆனால் நான் இதனை மறுக்கவில்லை ஏற்றுக் கொள்கிறேன்.
என் கேப்டன்சியை தொடர்வதா வேண்டாமா என்பதை நான் முடிவு செய்ய முடியாது, வாரியம்தான் முடிவெடுக்க வேண்டும். அணிக்குத்தான் முதல் முன்னுரிமை, தனிநபர் இரண்டாவதுதான்.
கேப்டன்சி இது போன்ற அணியில் சவால்தான், காரணம் எப்போதும் தரவரிசையில் 9 அல்லது 10-வது இடத்தில் இருக்கிறோம். முதல் தர அணிகளுடன் ஆடும்போது நெருக்கடி இருக்கவே செய்யும். கடந்த 2 ஆண்டுகள் சென்றவாறு கடைசி 2 டெஸ்ட் போட்டிகள் செல்லவில்லை.
குற்றச்சாட்டு என் மீதே திரும்புகிறது, காரணம் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் டாஸ் வென்று முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தது நான். அதனால்தான் கூறுகிறேன் நான் என் தவறுகளைத் திருத்திக் கொள்ள வாய்ப்பளிக்க வேண்டும் என்கிறேன். அணியின் மோசமான ஆட்டத்துக்கு நான் காரணமாக விரும்பவில்லை, என்னை மன்னியுங்கள். நான் எப்போதும் அணியை நல்ல முறையில் வழிநடத்திச் செல்லவே செய்துள்ளேன், நானும் மனிதன் தான், தவறுகள் இழைப்பது இயல்புதான்.
அனைவரும் 100% பங்களிப்புச் செய்தனர், ஆனால் அனைவரும் அதில் வெற்றி பெறுவார்கள் என்பது கூற முடியாது. இது ஒன்றும் கிளப் ஆட்டமல்ல. கடந்த 4 ஆண்டுகளில் பாடுபட்டு சேர்த்தப் பெருமைகளை நாங்கள் விட்டுக் கொடுக்க விரும்பவில்லை.
இத்தகைய டெஸ்ட் போட்டிகளிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு கூறினார் முஷ்பிகுர் ரஹிம்.