புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சி தொடர்பில் பொதுமக்களை இருட்டில் வைத்திருக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தந்தை செல்வா நினைவு தின நிகழ்வு, கொழும்பு, பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் குறிப்பிட்டதாவது,
புதிய அரசமைப்பு உருவாக்கம் என்பது எந்தத் தேசத்திலும் இலகுவான விடயமல்ல. அது அந்த நாட்டின் தலைமைத்துவம் எவ்வாறானதாக அமைகின்றது என்பதைப் பொறுத்த விடயம்.
அரசமைப்பின் 13 ஆவது திருத்தம் நடைமுறைக்கு வந்த காலம் முதல் அனைத்து ஜனாதிபதிகளும் அதிகாரப் பகிர்வு குறித்து முன்னேற்றத்தைக் காண்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவ்வாறான ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்தார். அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் ஆரம்பக் கூட்டத்தில் உரையாற்றுகையில் ஆகக்கூடிய அதிகாரப் பகிர்வுக்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு கோரியிருந்தார். அதற்கான யோசனைகளை முன்வைக்குமாறு கேட்டிருந்தார்.
புதிய அரசமைப்பை உருவாக்கும் முயற்சிகளை நாங்கள் முழு நாட்டினதும் நன்மைக்காகவே முன்னெடுக்கின்றோம். சிங்கள மக்களின் பொருளாதார அபிவிருத்திக்கும் அதிகாரங்கள் பகிரப்படுவது அவசியமானதாகும்.
இலங்கையில் இன்று அனைத்து மாகாண சபைகளின் முதலமைச்சர்களும் அதிகாரப்பகிர்வைக் கோரி நிற்கின்றனர்.
நாங்கள் மக்களுக்குப் புதிய அரசமைப்பை உருவாக்கும் முயற்சிகள் குறித்துத் தெளிவுபடுத்தவேண்டும். புதிய அரசமைப்பை உருவாக்கும் முயற்சிகளை இந்த நாட்டின் மக்கள் எதிர்க்கவில்லை. நாங்கள் அவர்களை இந்த விடயம் தொடர்பில் இருட்டில் வைத்திருக்க முடியாது.
கடந்த காலங்களில் நாங்கள் பாதை தவறியுள்ளோம். ஆனால், காலங்கள் செல்லச் செல்ல அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டுள்ளோம். புதிய அரசமைப்பை உருவாக்கும் முயற்சிகளில் நாங்கள் வெற்றிபெறுகின்றோமா என்பதே எங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்றார்.