நாடு கடந்துள்ள இலங்கையர்களுக்கு எச்சரிக்கை விடும் ராஜபக்சர்கள்..! – சதியின் வலையில் தமிழர் கனவு..!
நாடு இப்போது இருக்கும் பிரச்சினை போதாது என்று சர்வதேச ரீதியில் மஹிந்த தரப்பிற்கு ஆதரவு திரட்டும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
எந்தவகையிலும் புதிய அரசியல் யாப்பை நிறைவேற்றி விடக் கூடாது என்பதில் முக்கிய கவனம் எடுத்து மஹிந்த ஆதரவாளர்கள் தமது காய்நகர்த்தல்களில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
விகாரை ஒன்றினை திறந்து வைப்பதற்காக ஜப்பான் சென்றுள்ளதாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்ட கோத்தபாயவின் பயணமும் ஆட்சிக்கு எதிரான ஓர் காய் நகர்த்தல் என்றே தெரிவிக்கப்படுகின்றது.
ஜப்பான் சென்றுள்ள கோத்தபாய குழு அங்கு மஹிந்த ஒன்றிணைவு என்ற தொணிப்பொருளில் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில கருத்து தெரிவிக்கையில்,
அடுத்த ஆண்டு புதிய அரசியல் யாப்பு தொடர்பில் விவாதம் செய்யப்பட உள்ளது. எதிர்கால இலங்கையின் தலை எழுத்தை தீர்மானிக்கும் ஒன்றே இந்த அரசியல் யாப்பாகும்.
பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு என்ற வீதத்தில் இதனை நிறைவேற்றி கொண்டு பின்னர் அதனை மக்கள் மத்தியில் சமர்ப்பிக்க திட்டம் தீட்டியுள்ளார்கள்.
இலங்கையை இரண்டாக மட்டுமல்லாது ஒன்பது துண்டுகளாக பிரிக்கும் சதியிலேயே அரசு இப்போது ஈடுபட்டுள்ளது, இதனை ஒருபோதும் அனுமதிக்க கூடாது. நீங்கள் அனைவரும் இதற்கு தயாரா எனற கேள்வியை நாம் முன்வைக்கின்றோம் என கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அவரைத் தொடர்ந்து கோத்தபாய உரையாற்றும் போது,
விடுதலைப்புலிகளை உடைக்க மிக முக்கிய பங்காற்றியவர்கள் புலனாய்வுத் துறையினரும் பொலிஸாருமே. ஆனால் இவர்கள் இப்போது சிறைக்கு செல்கின்றார்கள்.
நான் இவர்களுடன் சேவையாற்றிய காரணத்தினால் இதனை தெரிவித்துக் கொள்கின்றேன், இவ்வாறு எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் இராணுவத்தினர் தண்டிக்கப்பட்டு வருகின்றார்கள்.
இவ்வாறான செயற்பாடுகளுக்கு காரணம் நாட்டிற்கு சமாதானம் கொண்டு வருவதற்காகவே என்று தெரிவிக்கின்றார்கள். இவ்வாறாக பாதுகாப்பற்றத் தன்மையே இலங்கையில் காணப்படுகின்றது என கோத்தபாய கருத்து வெளியிட்டுள்ளார்.
இவர்கள் நாடு கடந்து சென்று இலங்கையர்களுக்கு எச்சரிக்கை விடுவதன் மூலம் தமது அரசியல் இலாபங்களுக்காகவும், சுயலாபத்திற்காகவும் நாட்டை பதற்றத்திற்கு உள்ளாக்குகின்றார்கள் என்பது தெளிவாகின்றதாக கூறப்படுகின்றது.
இதேவேளை புதிய அரசியல் யாப்பில் நாடு பிளவடையப்போவதில்லை, அதனால் நாட்டில் நல்லிணக்கம் ஏற்படும் என அரசு கூறிக்கொண்டு இருக்கும் வேளையில் இவர்களது போக்கு இலங்கைக்கு ஆபத்தை மட்டுமே ஏற்படுத்தக் கூடும்.
அதேபோன்று விடுதலைப்புலிகள் பற்றியும், இராணுவ வீரர்கள் தண்டிக்கப்படுகின்றார்கள் எனவும் போர் வெற்றிக்கு தானும் காரணம் என்ற வகையிலும் கோத்தபாய கருத்தை தெரிவித்துள்ளார்.
இவை கடந்த காலத்தை நினைவு படுத்தவும், தனது முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையிலும் கோத்தபாயவின் கருத்து அமைந்துள்ளது. அத்தோடு புலிகள் அழிக்கப்பட்டு விட்டார்கள் என அவர் தெரிவிக்கவில்லை உடைந்து போய் உள்ளதாகவே கூறியுள்ளார்.
அதனால் மீண்டும் விடுதலைப்புலிகள் என்ற மாயை மக்களிடம் புகுத்தப் படுகின்றதா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்துவதாகவே அமைகின்றது இவரது கருத்து.
இராணுவத்தினரை தண்டிக்கவில்லை அவர்களை எப்போதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என பிரதமர் மற்றும் ஜனாதிபதி அழுத்திக் கூறிக்கொண்டிருக்கும் போது கோத்தபாயவின் மாற்றுக்கருத்துகள் வரவேற்கத்தக்கது அல்ல.
இவர்களின் இந்த செயற்பாடுகள் மூலம் இலங்கையில் ஆரம்பம் முதலாக ஏற்பட்ட இராணுவப்புரட்சி சதி, இனவாதப் பரப்புரைகள், மீண்டும் புலிகள் என்ற வாதம், அரசியல் யாப்புக்கு எதிரான சதி..,
இவை அனைத்திற்கும் பின்னணியில் மஹிந்த தரப்பினரே இருப்பதாக தென்னிலங்கை புத்திஜீவிகள் தெரிவித்துள்ளனர்.
ஆக மொத்தம் எதிர்வரும் மாதம் முதல் இலங்கையில் பாரிய அளவு குழப்ப நிலைகளை ஏற்படுத்த தற்போது ராஜதந்திர காய் நகர்த்தல்களில் மஹிந்த தரப்பு வெளிப்படையாகவே இறங்கி விட்டார்கள் என கூறப்படுகின்றது.
எவ்வாறாயினும் தற்போது இவற்றை தாண்டி எவ்வாறு புதிய அரசியல் யாப்பினை அரசு நிறைவேற்றப்போகின்றது, தமிழர்கள் எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கும் அதிகாரப்பகிர்வு சதிகளின் வலையில் சிக்கி எட்டாக் கனியாகவே போய்விடுமா என்பது தெரியவில்லை.
என்றபோதும் நாட்டின் அமைதியை சீரழிக்கும் எவராக இருந்தாலும் தடுக்கப்படா விட்டால் இலங்கையில் பிரச்சினையும் இனவாதமும் எப்போதும் முடியாத ஒரு தொடர்கதைதான்…,