நந்திக்கடல் தோல்வியை வெற்றியாக மாற்றும் முயற்சி! அனைத்துமே வெளிநாட்டு உத்தரவா??
இனவாதம், இராணுவ புரட்சி எல்லாமே இப்போது புதிய அரசியல் யாப்பிற்கு குறிவைத்து விட்டன. அதனால் ஜனவரி முதல் பாரிய மாற்றங்கள் நாட்டில் ஏற்படக்கூடும் என்றே தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக இந்த புதிய அரசியல் யாப்பு தமிழர்கள் மூலமாக கொண்டுவரப்பட்டுள்ளது, என்ற கருத்தையே தென்னிலங்கை அரசியல் தரப்பினர் வலுப்படுத்திக் கொண்டு இருக்கின்றார்கள்.
இனவாதத்தை விடுதலைப்புலிகளாக மாற்றி திரிபு படுத்திய பிக்குகள் இப்போது பரம சாதுக்களாக பதுங்கிவிட்டனர். ஆனாலும் அவர்களின் அடுத்த கட்டதிட்டம் இப்போது வரை வெளிப்படுத்தப்படவில்லை, புதிராகவே இருக்கின்றது.
அவர்களின் கருத்து வெளிநாடுகளில் இருந்து வாழும் புலம் பெயர் தமிழர்களே இலங்கையில் இப்போது ஏற்படும் பிரச்சினைகளுக்கு காரணம் என்பதே. இந்த கருத்தே தென்னிலங்கையில் அதிகமாக பரப்பப்பட்டு கொண்டு வருகின்றது.
அதனையும் தாண்டி இனவாதத்தினை நாம் பரப்பவில்லை அதனை தமிழ் தலைமைகளே பரப்பி வருகின்றார்கள் அவர்களை நிறுத்தச் சொல்லுங்கள் என்று தெரிவித்துள்ளனர். இதன் உண்மை நிலை மக்களுக்கு அண்மைக்கால அவதானிப்பின் மூலம் தெளிவாக தெரியும்.
இதேவேளை நேற்றைய தினம் ஊடக சந்திப்பு ஒன்றில் கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன,
புதிய அரசியல் யாப்பு இலங்கையில் எழுதப்படவில்லை அது வெளிநாட்டில் இருந்து எழுதப்பட்டு கொண்டு வரப்பட்டுள்ளது. இது போல ஒன்றினை ஏற்கனவே நந்திக்கடலில் தோல்வியடையச் செய்துள்ளோம்.
இப்போது மீண்டும் வெளிநாட்டில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, அதனையே இங்கே நிறைவேற்றப் பார்க்கின்றார்கள் ஒரு போதும் அது நடக்காது என தெரிவித்துள்ளார்.
ஆக மொத்தம் முற்று முழுதாக அரசியல் யாப்பினை பயன்படுத்தி மாற்று வகை எண்ணத்தை மக்கள் மத்தியில் புகுத்தி அதன் மூலம் நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்துவதே இதன் பின்னணி என கூறப்படுகின்றது.
அதன் காரணமாகவே இனவாதம் உட்பட அண்மையில் ஏற்பட்ட அனைத்து பிரச்சினைகளும் ஓரங்கட்டப்பட்டு விட்டன.
அது சரி பூதாகரமான பிரச்சினையை முன்வைக்க சிறந்த ஆயுதமாக ஒன்று கையில் சிக்கிவிட்டது. அதுவே அரசியல் யாப்பு அதனை விட்டு விட்டு வெட்டிப்பிரச்சினைகள் மூலம் ஒன்றும் செய்து விட முடியாது என்பதை அறிந்ததால் இப்போது அரசியல் யாப்பை தொற்றி விட்டார்கள்.
இதற்காக பௌத்தம் காக்கும் படைகள், மஹிந்த தரப்பு, கூட்டு எதிர்க்கட்சி மற்றும் இனவாதம் பரப்பிய அனைவரும் ஒன்றாக இணைந்து விட்டார்கள் என்றே கூறப்படுகின்றது.
தனித்தனியாக அரசிற்கு எதிராக இருந்தவர்கள் எல்லோரும் இப்போது ஒன்று திரண்டு ஒரே கருத்தை முன்வைக்கத் தொடங்கி விட்டார்கள்.
அதனால் ஜனவரி முதல் மிகப்பெரிய போராட்டங்களை இலங்கை சந்திக்கக் கூடும் என்றே தென்னிலங்கை அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.