நடிகை குஷ்பு வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த பெண்ணிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறை தொலைபேசிக்கு சனிக்கிழமை அதிகாலை 3.45 மணிக்கு ஓர் அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர், பிரபல நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான குஷ்புவின் பட்டினப்பாக்கம் வீட்டில் வைக்கப்பட்ட வெடிகுண்டு சிறிது நேரத்தில் வெடிக்கும் என கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த அலுவலக ஊழியர்கள், உடனடியாக காவல்துறை உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். குஷ்பு வீட்டில் வெடிகுண்டு கண்டறியும் சோதனை செய்யும்படியும், அந்த அழைப்பில் பேசிய மர்ம நபர் குறித்து விசாரணை செய்யவும் காவல்துறையினர் உத்தரவிட்டனர்.
பட்டினப்பாக்கம் லீத்கேசில் வடக்குத் தெருவில் உள்ள குஷ்பு வீட்டில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸார் சோதனை நடத்தச் சென்றனர். போலீஸார் நடத்திய சோதனையில் வெடிகுண்டு கண்டெடுக்கப்படவில்லை.
பெண்ணிடம் விசாரணை: இதற்கிடையே சென்னை போலீஸார் அந்த அழைப்புக் குறித்து விசாரணை செய்ததில், திருமூர்த்தி மலை பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் (45) என்பவர் 108 ஆம்புலன்ல் அலுவலகத்துக்கு பேசியது தெரியவந்தது. போலீஸார் மாரியம்மாளை பிடித்து விசாரணை செய்ததில் அவர் சிறிது மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது.