நடிகை கிஸ்மத் பெய்க் சுட்டுக் கொலை!
பாகிஸ்தானின் பிரபல மேடை நடிகைகளில் ஒருவரான கிஸ்மத் பெய்க் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் லாகூர் நகரில் கடந்த வியாழனன்று இச்சம்பவம் இடம்பெற்றது.
இச் சம்பவம் தொடர்பாக நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள், நடிகை கிஸ்மா பெய்க் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
8 தடவைகள் கிஸ்மா பெய்க் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதனால், கிஸ்மா பெய்க்கின் வயிறு, கைகள், கால்களில் காயங்கள் ஏற்பட்டன.
இச் சம்பவத்தையடுத்து கிஸ்மா பெய்க், வைத்தியசாலையொன்றின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸ் அத்தியட்சகர் தாஹிர் ரெஹ்மான் தெரிவித்தார்.
எனினும், கிஸ்மா பெய்க்கின் உயிரை காப்பாற்ற முடியவில்லை. லாகூரில் நடைபெற்ற மேடை நாடகமொன்றில் கிஸ்மா பெய்க் நடித்த பின்னர், காரில் தனது வீட்டை நோக்கி சென்றுகொண்டிருந்த போது அவரின் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டது.
அவரின் பிரத்தியேக உதவியாளர் மற்றும் சாரதியும் இச் சம்பவத்தில் காயமடைந்தனர். எனினும், அவர்களின் நிலை ஆபத்தானதாக இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
‘உம்மால் மீண்டும் நடனமாட முடியாமல் செய்வோம்’ என ஆயுதபாணிகள் சத்தமிட்ட பின்னர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக நடிகை கிஸ்மத் பெய்க்கின் செயலாளர் அலி பட் தெரிவித்தார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
இச் சம்பவத்தையடுத்து, விசாரணை மேற்கொண்ட பொலிஸார் நால்வரைக் கைது செய்துள்ளனர். கிஸ்மத் பெய்க்கின் தாயாரிடம் வாக்கு மூலம் பெற்றதுடன், கிஸ்மத்தின் பெய்க்கின் முன்னாள் கணவர் ரானா முஸம்மில், சக நடிகரான மன்சூர் மற்றும் நண்பர் ஒருவரிடம் விசாரணை நடத்தியதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
நடிகை கிஸ்மத் பெய்க்குக்கு எதிராக இதற்கு முன்னரும் இரு தடவைகள் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. எனினும், அச் சம்பவங்களில் அவர் காயமின்றி தப்பியிருந்தார்.
லாகூரில் நடைபெற்ற, கிஸ்மத் பெய்க்கின் இறுதிச் சடங்கில் பெரும் எண்ணிக்கையான கலைஞர்கள் பங்குபற்றினர். கிஸ்மத் பெய்க் கொலை செய்யப்பட்டமை பாகிஸ்தானிலுள்ள கலைஞர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இச் சம்பவத்தையடுத்து சில தினங்கள் நாடகம் எதுவும் அரங்கேற்றப்படவில்லை. இக் கொலைக்கு எதிராக கலைஞர்கள் பலர் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
பாகிஸ்தானில் மேடைக் கலைஞர்கள் சுட்டுக்கொல்லப்படுவது இது முதல் தடவையல்ல. நகு, நத்ரா, யஸ்மின், நகினா, நைனா, மார்வி, கரிஷ்மா, சன்கம், அர்ஸோ உட்பட பல கலைஞர்கள் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
நாடகமொன்றில்…
இவ் வருட முற்பகுதியில் தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்துநரான குஃபியா எனும் யுவதி, இனந்தெரியாத நபர் ஒருவர் ரசிகராக நடித்து வழங்கிய ஐஸ் கிறீமை உட்கொண்டதால் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.