பின்னர் நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி ஆகியோர் சங்கத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:–
நடிகர் சங்க பொதுக்குழுவில் முன்னாள் நிர்வாகத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஏற்கனவே இந்த முறைகேடு புகார் தொடர்பாக முன்னாள் நிர்வாகிகள் சரத்குமார், ராதாரவி ஆகியோர் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டனர்.
அவர்களை நிரந்தரமாக சங்கத்தில் இருந்து நீக்குவதற்கு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சங்கத்தில் முந்தைய நிர்வாகத்தால் பல்வேறு தவறுகள் நடந்துள்ளன. எனவே அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுக்குழுவில் வற்புறுத்தப்பட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
பொதுக்குழு கூட்டம் செல்லும்இனிமேல் பொறுப்புக்கு வருபவர்களுக்கு இது ஒரு பயத்தை ஏற்படுத்தும். நடிகர் சங்க அறக்கட்டளையில் சரத்குமார், ராதாரவி ஆகிய இருவரும் நிரந்தர உறுப்பினர்களாக நீடிக்க அவர்கள் பொறுப்பில் இருந்தபோது அறக்கட்டளை விதிமுறையில் மாற்றம் செய்துள்ளனர்.
5 பேர் தான் அறங்காவலர்களாக இருக்க முடியும் என்று விதியை திருத்தி உள்ளனர். அந்த விதிமுறையை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்பதற்கும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருட வரவு–செலவு கணக்குகளுக்கும் ஒப்புதல் பெறப்பட்டது. பொதுக்குழுவை லயோலா கல்லூரியில் இருந்து நடிகர் சங்க வளாகத்துக்கு மாற்றியதற்கும் ஒப்புதல் பெறப்பட்டது. அனைத்து துறைகளில் இருந்தும் அனுமதி சான்றிதழ் பெற்று சட்டப்படியே இந்த பொதுக்குழு நடந்துள்ளது. எனவே இந்த பொதுக்குழு கூட்டம் செல்லும்.
போலீசில் புகார்சிலர் பொதுக்குழு கூட்டம் நடந்த பகுதியில் தகராறில் ஈடுபட்டனர். அத்துமீறி உள்ளே நுழைய முயற்சித்தனர். தடுத்தவர்களை தாக்கி காயப்படுத்தி உள்ளனர். கருணாசின் காரை உடைத்துள்ளனர். அவர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்படும். நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்துவிட்டு 67 பேர் எந்த வித தொடர்பும் இல்லாமல் இருக்கின்றனர். அவர்கள் முகவரிக்கு கடிதம் அனுப்பினாலும் திரும்பி வந்துவிடுகிறது.
எனவே அந்த 67 பேரையும் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டது. இன்றைய பொதுக்குழுவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
3 ஆண்டுக்குள் புதிய கட்டிடம்நடிகர் சங்க கட்டிடத்துக்கு புதிய கட்டிடம் கட்ட சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமத்தின் அனுமதி கேட்டு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.
அனுமதி கிடைத்தவுடன் கட்டுமான பணிகள் தொடங்கும். நாங்கள் பதவியில் இருக்கும் 3 வருட காலத்துக்குள் கட்டிடத்தை கட்டி முடிப்போம். தற்போது நடிகர் சங்கத்தில் ரூ.8.5 கோடி இருப்பில் உள்ளது.
நடிகர் சங்க பொதுக்குழுவுக்கு முன்னணி நடிகர்கள் வரவில்லையே என்று கேள்வி எழுப்பப்படுகிறது. நடிகர்கள் விக்ரம், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, கரண் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். சிலர் வராதது அவரவர்களின் தனிப்பட்ட விருப்பம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
விஷால் ஆவேசம்முன்னதாக நடிகர் சங்க பொதுக்குழுவில் விஷால் பேசியதாவது:–
நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நல்லது செய்ய உழைக்கிறோம். ஆனால் சிலர் அதற்கு இடையூறு செய்கிறார்கள். வழக்கு போடுகிறார்கள். நடிகர் சங்க நிலத்தை மீட்டது தவறா? புதிய கட்டிடம் கட்ட முயற்சிப்பது தவறா? என்னை பார்த்து, ‘நீ ஆம்பளையா?’ என்று கேட்டனர், ஆம்பளை என்பதால் தான் இந்த இடத்தில் நிற்கிறேன். எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் போன்றவர்களின் ஆத்மாக்கள் எங்களுடன் இருக்கிறது.
பழைய நிர்வாகத்தில் முறைகேடுகள் நடந்தன. அதை தட்டிக் கேட்டோம். நடவடிக்கை எடுத்தோம். இதனால் காழ்ப்புணர்ச்சி காட்டுகிறார்கள். நடிகர் சங்கம் சரத்குமார், ராதாரவிக்கு மட்டும் சொந்தமானது அல்ல. அறங்காவலர்களை அவர்களே நியமித்தனர். எனவேதான் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட முறையில் அவர்கள் மீது எனக்கு காழ்ப்புணர்ச்சி கிடையாது.
யார் இடையூறு செய்தாலும், எந்த வகையில் தொல்லை கொடுத்தாலும் அதை எதிர்கொள்வேன். நடிகர்–நடிகைகள் தற்கொலையில் ஈடுபடுவது வருத்தம் அளிக்கிறது. நடிகர் சாய், நடிகை சபர்ணா ஆகியோர் சமீபத்தில் தற்கொலை செய்துள்ளனர்.
ஊழல் நடக்காதுநடிகர்–நடிகைகள் யாரும் இனிமேல் பலியாக கூடாது. என்ன பிரச்சினைகள் இருந்தாலும் நடிகர் சங்கத்துக்கு வாருங்கள். எங்களிடம் குறைகளை சொல்லுங்கள். உங்கள் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படும்.
நடிகர் சங்க நிர்வாகிகள் அனைவரும் சிறப்பாக செயல்படுகிறோம். கணக்கு–வழக்குகள் முறையாக பராமரிக்கப்படுகின்றன. குண்டூசிக்கு செலவு செய்தாலும் கணக்கு எழுதுகிறோம். வீட்டில் இருந்துதான் சோறு கட்டி வருகிறோம். பேட்டா கிடையாது.
நடிகர் சங்கத்தில் எந்த ஊழலும் நடக்காது என்று நான் உறுதி அளிக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
நடிகர் கமல்ஹாசன் வாழ்த்துபொதுக்குழு கூட்டத்தில் மூத்த கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு, தமிழ் திரைப்பட நூற்றாண்டு சம்பந்தமான வீடியோ ஒளிப்பரப்பட்டது. நடிகர் கமல்ஹாசன் ‘ஸ்கைப்’பில் வாழ்த்தினார்.
பொதுக்குழு கூட்டத்தில் நடிகர்கள் சிவகுமார், பாக்யராஜ், விஜயகுமார், பிரபு, ராஜேஷ், ஒய்.ஜி.மகேந்திரன், பார்த்திபன், மன்சூர் அலிகான், விமல், மனோ பாலா, விஷ்ணு விஷால், ஐசரி கணேஷ், பூச்சி முருகன், தியாகு, விக்ரம் பிரபு, நடிகைகள் சுஹாசினி, அம்பிகா, சங்கீதா, கோவை சரளா உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.