நச்சுத்தன்மையற்ற தேசிய காய்கறி சந்தை மற்றும் கண்காட்சி எதிர்வரும் 30ம் திகதி முதல் ஏப்ரல் முதலாம் திகதி வரை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. நச்சுத் தன்மையற்ற உணவுகளுக்காக தொடரந்து குரல் எழுப்பிவரும் பாராளுமன்ற உறுப்பினரான அத்துரலியே ரத்தன தேரர் இக்கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது.
இங்கு உரையாற்றிய தேரர், இரசாயன உரம், கிருமிநாசினி போன்றவை காரணமாக பயிர்கள் விஷமடைவதாகவும் அவ்வாறு விளைவிக்கப்படும் உணவுப் பொருட்களை உண்பதால் உடலுக்கு தீங்கு விளைவதாகவும் தெரிவித்ததோடு, நாட்டில் சிறுநீரக நோயாளர்கள், நீரிழிவு நோயாளர்கள் மற்றும் புற்றுநோயாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதற்கு பாதுகாப்பற்ற, நச்சுத்தன்மை கொண்ட உணவுப் பொருட்களே காரணமென்பதால் நச்சுத்தன்மையற்ற உணவுப் பொருள் உற்பத்தி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் ஊடகவியலாளர்களிடம் கூறினார்.