தேர்வாளர்களின் அனுமதி கேட்டு தான் விளையாட வரவில்லையென்றும், இன்று வரை அப்படியே வாழ்ந்து வருவதாகவும் சமீபத்தில் ஓய்வு பெற்ற இந்திய வீரர் ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.
வேகப்பந்து வீச்சாளராக கிட்டத்தட்ட 18 வருடங்கள் பங்காற்றிய ஆஷிஷ் நெஹ்ரா, பல முறை காயம் காரணமாக அணிக்கு தேர்வாகாமல் இருந்தவர். ஞாயிற்றுகிழமை டெல்லியில் நடந்த இந்தியா – நியூஸிலாந்து டி20 போட்டியோடு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அவரைப் பற்றி பேசிய தேர்வாளர் கமிட்டி தலைவர் எம் எஸ் கே பிரசாத், நியூஸிலாந்து டி20 தொடரைத் தாண்டி நெஹ்ராவின் பெயர் பரிசீலிக்கப்படாது என்று கூறியிருந்தார்.
இது தொடர்பாக நெஹ்ராவிடம் கேட்டபோது, “அவர் பேசியதைப் பற்றி தெரிந்து கொண்டேன். தேர்வுக் குழுவின் தலைவர் என்னிடம் இதைப் பற்றி எதுவும் பேசவில்லை. நீங்கள் என்னிடம் கேள்வி கேட்கிறீர்கள். அணி நிர்வாகத்துடன் நான் என்ன பேசினேன் என்பதைப் பற்றி மட்டும் தான் என்னால் சொல்ல முடியும்.
ராஞ்சியில் விராட் கோலியிடம் என் ஓய்வு பெறும் திட்டத்தைக் கூறினேன். ‘நீங்கள் உறுதியாக இருக்கிறீர்களா? நீங்கள் இன்னும் ஐபிஎல் விளையாடலாமே, பயிற்சியாளராக இருந்து கொண்டே வீரராகவும் இருக்கலாமே?’ என்று அவர் சொன்னார். இல்லை நான் மொத்தமாக ஓய்வு பெறுகிறேன் என்று கூறினேன்.
நான் எனக்கு விடைதரும் வண்ணம் எந்த போட்டியும் கேட்கவில்லை. எனது சொந்த ஊரில் எனது கடைசி போட்டி அமைந்தது என் அதிர்ஷ்டமே. இதை நான் பலமுறை சொல்லிவிட்டேன். கடந்த 8-9 வருடங்களில் எனது கடின உழைப்புக்காக கடவுள் எனக்கு இந்த வகையில் பரிசளித்துள்ளர் என்று நினைக்கிறேன்.
விராட்டும் ரவி சாஸ்திரியும் அணி நிர்வாகத்தில் பங்காற்றுகிறார்கள் என நினைக்கிறேன். ஏனென்றால் அவர்களிடம் தான் நான் பேசினேன். வேறெந்த தேர்வாளருடனும் இந்த விஷயம் குறித்து நான் பேசவில்லை.
நான் விளையாட ஆரம்பித்த போது எந்த தேர்வாளரின் அனுமதியையும் பெற்று ஆடவரவில்லை. நான் ஓய்வு அறிவித்தபோதும் யாருடைய அனுமதியையும் பெறவில்லை.” என்று கூறியுள்ளார்.