தேசம் விட்டு நீங்கினாலும் தமிழன் சிந்திக்கமாட்டான்..!
நேற்றைய தினம் கனடாவில் ஒன்டாரியோ மாகாண சட்டமன்றத்தின், ஸ்காபரோ ரூஜ் ரிவர் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில், இரண்டு ஈழத் தமிழ் வேட்பாளர்கள் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவியிருக்கின்றனர்.
தமிழர்கள் அதிகம் வசிக்கும் இந்தத் தொகுதியில் இரண்டு ஈழத் தமிழ் வேட்பாளர்கள் களமிறங்கியிருந்தனர். எனினும் அவர்களால் வெற்றி பெறமுடியவில்லை. ஆனால் 7,393 வாக்குகளைப் பெற்ற, முற்போக்கு கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளர் ரேமன்ட் சோ வெற்றி பெற்று இருக்கிறார்.
தமிழ் மக்களிடத்தில் ஒற்றுமையும், விட்டுக் கொடுப்பும் இல்லை என்று அடிக்கடி நம்மை நாமே சொல்லிக் கொண்டு தான் இருக்கின்றோம். ஒற்றுமையும் விட்டுக் கொடுப்பும் இருந்திருக்குமாயின் எங்களுக்கு இந்த நெட்டூரம் முள்ளிவாய்க்காலில் வைத்து நடந்திருக்காது.
ஆனால், நாங்கள் அதை எம்மோடு பிறந்த ஒரு குணமாகவே வைத்திருக்கின்றோம். வன்னிப் போரில் மகிந்த ராஜபக்ச வெற்றி பெற்றார் என்று அறிவித்திருந்தாலும், அது மகிந்த ராஜபக்சவின் வெற்றியன்று.
மாறாக, அவரின் சகோதரர்களான கோத்தபாய, பசில், சமல் போன்ற சகோதர ஒற்றுமையும், அதைத்தான்டிய இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அன்றைய மகிந்தவின் அமைச்சர். அவரைப் போன்று, பல அமைச்சர்களின் ஒற்றுமையும் விட்டுக் கொடுப்பும் மாத்திரமல்லாது, இன்றைய பிரதமரான ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவும், வழிகாட்டல்களும் இல்லாமல் மகிந்தவினால் வன்னிப் போரை வெற்றி கொண்டிருக்க முடியாது.
ஆனால் தமிழர்கள் மட்டும் தங்கள் ஒற்றுமையீனத்தால் இன்றுவரை வெற்றியை சுவைக்காமல் தோல்வியில் தள்ளாடும் நிலையில் இருக்கிறார்கள்.
அது இலங்கையில் இருக்கும் போது மட்டுமல்ல, கடல் கடந்து வெளிநாடு சென்றாலும் அவர்களின் அந்தக் குணம் இன்னமும் மாறவில்லை என்பது தான் உண்மை நிலை.
நேற்றைய தினம் கனடாவில் ஒன்டாரியோ மாகாண சட்டமன்றத்தின், ஸ்காபரோ ரூஜ் ரிவர் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில், இரண்டு ஈழத் தமிழ் வேட்பாளர்கள் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவியிருக்கிறார்கள்.
உண்மையில் இந்த தேர்தலில் இவர்களில் ஒருவர் வெற்றி பெற்று இருக்க வேண்டும் என்கிறார்கள் அங்கிருக்கக்கூடியவர்கள்.
ஏனெனில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் ஸ்காபரோ ரூஜ் ரிவர் தொகுதியில் நடத்தப்பட்ட இந்த இடைத்தேர்தலில், லிபரல் கட்சி சார்பில் பிரகல் திரு, மற்றும் தேசிய ஜனநாயக கட்சி சார்பில் நீதன் சண் ஆகிய இரண்டு ஈழத்தமிழ் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
ஆனால் தேர்தலில் முடிவில் வாக்குகள் எண்ணப்பட்ட போது, 7,393 வாக்குகளைப் பெற்ற, முற்போக்கு கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளர் ரேமன்ட் சோ வெற்றி பெற்று அதிகாரத்தை பிடித்திருக்கிறார்.
இந்த இரு ஈழத்தவர்களில் ஒருவர் மட்டும் கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளர் ரேமன்ட் சோவை எதிர்த்திருந்தால் அவருக்கான வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்திருக்கும். ஆனால் ஒரே தொகுதியில் இருவரும் போட்டியிட்டு இறுதியில் இருவரும் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டடிருக்கிறார்கள் என்கிறார்கள் அவதானிகள்.
என்ன செய்ய முடியும், நமக்குத் தான் சமயோசித புத்தியும், விட்டுக்கொடுப்பும் அறவே இல்லாமல் போய்விட்டதே. இருவரில் யாரேனும் ஒருவர் விட்டுக்கொடுத்து தேர்தலை எதிர் கொண்டிருந்திருந்தால் இன்று கனடாவில் ஒன்டாரியோ மாகாண சட்டமன்றத்தின் உறுப்பினராக பதவியை அலங்கரித்துக் கொண்டிருந்திருப்பார் ஈழத்தமிழர் ஒருவர்.
என்ன செய்வது எல்லாம் அ(வ)ன் செயல்…