துப்பாக்கி கட்டுப்பாடுகள் கடினமாக்கப்பட வேண்டும்: மத்திய அரசிடம் ரொறான்ரோ நகரபிதா…..
கனடாவில் அமுலில் உள்ள துப்பாக்கிப் பயன்பாட்டுக் கட்டுப்பாடுகளை மேலும் கடினமாக்குமாறு மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய பொதுப் பாதுகாப்பு அமைச்சருக்கு, ரொறொன்ரோ நகரபிதா ஜோன் ரொறி அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில் ரொறொன்ரோவில் துப்பாக்கி தொடர்பிலான வன்முறைகள் தீவிரமடைந்து வரும் நிலை தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
மேலும், கனடாவுக்குள் துப்பாக்கிகளை கடத்தி வருவதனையும், அவற்றை விற்பனை செய்வதையும் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ள அவர், அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசாங்கம் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்
அத்துடன், ‘துப்பாக்கிப் பயன்பாட்டினை மக்கள் மத்தியில் இருந்து அகற்றுவதன் மூலமே, தீவிரமடைந்துவரும் இவ்வாறான வன்முறைகளை கட்டுப்பாடடில் கொண்டுவர முடியும்.
தமது அன்புக்கு உரியவர்கள் துப்பாக்கி வன்முறையால் உயிரிழப்பதையோ, அன்றாடம் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களுடன் துயிலெழுவதையோ கனேடிய மக்கள் விரும்பவில்லை என்பதனை அனைரும் அறிந்துள்ளனர்.
மத்திய, மாகாண, நகர நிர்வாகங்கள் என அனைத்து தரப்பினரும் துப்பாக்கி கலாச்சாரம் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்பதனையே விரும்புகின்றனர்.
நகரின் அமைதியை சீர்குலைத்து, அங்குள்ள மக்களுக்கு தீங்கு விளைவிக்க நினைக்கும் எவரினதும் கைகளிலும் துப்பாக்கிகள் இருப்பதனை அனுமதிக்கக்கூடாது என்பதே எனது நிலைப்பாடாக உள்ளது.
அமெரிக்காவுடனான எல்லைப் பகுதிகள் ஊடாக மேற்கொள்ளப்படும் ஆயுதக் கடத்தல்களை தடுத்து நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும் என்பதுடன், உள்ளூரில் சட்டரீதியாக துப்பாக்கிகளை வைத்திருப்போரிடம் இருந்து திருடப்படும் துப்பாக்கிகளால் ஏற்படும் வன்முறைகளைத் தடுப்பதற்கும் வழிவகைகள் கண்டறியப்பட வேண்டும்’.எனவும் அந்த கடித்ததில் சுட்டிக்காட்டியுள்ளார்.