இந்திய டிரைவரை தீ விபத்தில் இருந்து காப்பாற்றிய பெண்ணுக்கு ஐக்கிய அரபு அரசு விருது வழங்கியுள்ளது. ஜாவஹெர் சயீப் அல் குமைத்தி என்பவர் அஜ்மான் நகரை சேர்ந்தவர் ஆவர். ராஸ் அல் கமையா நகர மருத்துவமனையில் 2 நாட்களுக்கு முன்பு தனது தோழியை சந்தித்து விட்டு காரில் அஜ்மான் திரும்பிக் கொண்டிருந்தார். அல் குமைத்தி காரை ஓட்டி வந்தபோது சாலையில் 2 சரக்கு லாரிகள் மோதிக்கொண்டு தீ பிடித்து எரிந்துள்ளது. அந்த லாரிகளின் டிரைவரான இந்தியாவை சேர்ந்த ஹர்கிர்த் சிங் என்பவரின் உடலில் தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது.
அப்போது அல் குமைத்தி, தனது தோழி அணிந்திருந்த மேல் அங்கியை கழற்றி மின்னல் வேகத்தில் காரில் இருந்து கீழே இறங்கிச் சென்றுள்ளார்.சரக்கு லாரிக்கு அடியில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஹர்கிர்த் சிங்கின் மீது தோழியின் மேல் அங்கியை துணிச்சலுடன் போர்த்தி தீயை அணைத்துள்ளார்.
அதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் ஹர்கிர்த் சிங்கையும், மற்றொரு சரக்கு லாரியின் டிரைவரையும் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். பின்னர் துணிச்சலாக செயல்பட்டு டிரைவரை தீ விபத்தில் இருந்து காப்பாற்றிய அல் குமைத்திக்கு ஐக்கிய அமீரக அரசு தைரியப் பெண் விருதை வழங்கியுள்ளது. அபுதாபியில் உள்ள இந்திய தூதரகமும் அல் குமைத்தியை கவுரவிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து அல் குமைத்தி கூறுகையில்: விபத்து நடந்த இடத்தில் பலர் இருந்தனர். டிரைவரின் உடல் தீப்பற்றி எரிந்ததால் யாரும் அவரை காப்பாற்ற முன்வரவில்லை. அதனால் அவரிடம் நான் சென்று நீங்கள் பிழைத்து கொள்வீர்கள். விரைவில் இங்கே மீட்பு படையினர் வந்து விடுவார்கள் என்று நம்பிக்கை வார்த்தை கூறினேன். அந்த சமயத்தில் ஒரு உயிரை காப்பாற்றவேண்டும் என்பது மட்டுமே என் மனதில் இருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.