ரஜினி நடிக்க ஷங்கர் இயக்கும் படம் 2.0. இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்துவிட்டது. கிராபிக்ஸ் உள்ளிட்ட தொழில் நுட்ப பணிகள் வேகமாக நடந்து வருகிறது. வரும் தீபாவளி தினத்தில் படம் திரைக்கு வரும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதை எதிர்நோக்கி கொண்டாட்டத்துடன் ரசிகர்கள் காத்திருந்தனர். திடீரென்று ரிலீஸ் தேதி மாற்றப்பட்டிருக்கிறது. தீபாவளிக்கு பதிலாக 2018ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது ரசிகர்களை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது. கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகளுக்கு மேலும் கால அவகாசம் தேவைப்படுவதே பட ரிலீஸ் தாமதத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. 2டி, 3டி, ஐமேக்ஸ் தொழில் நுட்பத்தில் உருவாகும் இப்படத்தில் ரஜினியுடன் அக்ஷய் குமார், எமி ஜாக்ஸன் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருக்கிறார்.
ரஜினி படம் தள்ளிப்போனதை அடுத்து அந்த நாளை விஜய் படக்குழு கைப்பற்றி இருக்கிறது. விஜய் நடிக்க அட்லி இயக்கும் 61வது படம் தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ளது. இதை கவனத்தில் வைத்து முன்பைவிட தற்போது படக்குழு படப்பிடிப்பில் வேகம் காட்டி வருகிறது. விரைவில் ஐரோப்பிய நாடுகளுக்கு விஜய்யுடன் இயக்குனர் உள்ளிட்ட டீம் படப்பிடிப்பு நடத்த பறந்து செல்லவிருக்கிறது.