திருகோணமலைத் துறைமுகத்தில் அமெரிக்கப் போர்க்கப்பல்
அமெரிக்க கடற்படையின் அன்ரனியோ வகையைச் சேர்ந்த, ஈரூடக போக்குவரத்துக் கப்பலான, யுஎஸ்எஸ் சோமசெற், USS Somerset (LPD-25) திருகோணமலைத் துறைமுகத்துக்கு வந்து சேர்ந்துள்ளது.
பயிற்சிக்கான பயணமாக நேற்று திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்த அமெரிக்க கடற்படைக் கப்பலுக்கு இலங்கை கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர்.
மாகின் தீவில் உள்ள அமெரிக்க கடற்படையின் ஈரூடகத் தயார் நிலை அணியில் இடம்பெற்றுள்ள இந்தக் கப்பல், இந்தோ- பசுபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் உறுதிநிலையை பேணுவதற்காக, 11வது மரைன் நடவடிக்கைகளுக்கான அணியுடன் இணைந்து 78வது கப்பற்படைப்பிரிவின் பகுதியில் பணியில் ஈடுபட்டு வருகிறது,
நான்கு நாள் பயணமாக திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்துள்ள அமெரிக்கக் கடற்படைக் கப்பல், வரும் 26ம் நாள் வரை இங்கு தரித்திருந்து, இலங்கை கடற்படையினருடன் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளது,
இந்தக் கப்பலின் மாலுமிகள், திருகோணமலைக் கடற்படைத் தளத்துக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.
திருகோணமலைக்கு வந்துள்ள அமெரிக்க போர்க்கப்பல், 208.5 மீற்றர் நீளத்தைக் கொண்டதாகும். இதில், 28 அதிகாரிகளும் 333 மாலுமிகளும் பணியாற்றுகின்றனர்.
சுமார் 800 வரையான படையினரை ஈரூடகத் தாக்குதலுக்காக ஏற்றிச் செல்லும் வசதி படைந்த இந்தக் கப்பலில், நான்கு உலங்கு வானூர்திகள், இரண்டு விமானங்கள் தரித்து நிற்கும் வசதிகளும் உள்ளன.
கடந்த சில மாதங்களில், இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள நான்காவது அமெரிக்கப் போர்க்கப்பல் இதுவாகும்.
– Puthinappalakai