தாய் மற்றும் 3 குழந்தைகளை கொடூரமாக தாக்கிய மர்ம நபர்: காரணம் என்ன?
பிரான்ஸின் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் விடுமுறையை கழித்து வந்த தாய் மற்றும் 3 குழந்தைகளை மர்ம நபர் ஒருவர் கத்தியால் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆல்ப்ஸ் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு தங்கும் விடுதியில் வைத்து இந்த தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. விடுதியின் முகப்பில் நின்று பேசிக்கொண்டிருந்த சிறுவர்கள் இருவரை முதலில் கொடூரமாக தாக்கிய அந்த நபர் பின்னர், அந்த விடுதிக்குள் சென்று தாயாரை தாக்கியுள்ளார்.
இதில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய அந்த குடும்பத்தினரை மீட்டு அந்த விடுதியினர் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சேர்ப்பித்தனர். இதில் 8 வயது சிறுமியின் நுரையீரலில் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததால் உடனடியாக அவரை கிரேனோபில் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
இதனைடையே இச்சம்பவத்தில் தொடர்புடைய நபரை கைது செய்த பொலிசார் நடத்திய விசாரணையில், தாக்குதலுக்கு உள்ளான தாயாரும் மகள்களும் முகம் சுளிக்கும் வகையில் உடை அணிந்திருந்தால் அவர்களை கடுமையாக தாக்கியதாக கூறியுள்ளார்.
ஆனால், குற்றவாளியின் இந்த காரணத்தை மறுத்துள்ள வழக்கறிஞர் ஒருவர், உடைகட்டுப்பாடு எதுவும் நாட்டில் அமுல்படுத்தாத நிலையில் இதுபோன்ற காரணங்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை என்றார்.
மேலும் இந்த தாக்குதலுக்கும் மத அடிப்படைவாதத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
தாக்குதலில் ஈடுபட்ட நபர் மொரோக்கோ நாட்டவர் எனவும் கர்பமான மனைவி மற்றும் தனது 2 குழந்தைகளுடன் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் அவர் விடுமுறையை கழிக்க வந்துள்ளதாக கூறப்படுகிறது.