அரசியலில் களம் காணுவது குறித்து வெவ்வேறு கட்சிகளில் இருக்கும் தனது நண்பர்களிடம் தனியாக சந்தித்து நடிகர் ரஜினி ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை கோடம்பாக்கத்திலுள்ள ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் ஏப்ரல் 2 ஆம் திகதி காலை முதல் ரஜினி தன் ரசிகர்களை சந்திப்பதாக தகவல் வெளியானது.
இதனால் குறித்த மண்டபத்தில் ஏராளமான ரசிகர்கள், நிர்வாகிகள் என்று ஒரு பெரும் கூட்டம் கூடியது. ஆனால் மாலை வரை ரஜினி மண்டபத்திற்கு வரவில்லை.
ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகியான சத்தியநாராயணா மட்டும் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
இதனைடையே சென்னையிலேயே இருந்த ரஜினி அவ்வப்போது சத்தியநாராயணவுடன் தொடர்பு கொண்டு பேசி ரசிகர்களின் கருத்துகளை கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
ரஜினி சமீபகாலமாக பா.ஜ.க.வின் பக்கம் சாயப் போவதாக வரும் தகவல்கள் குறித்து ரசிகர் மன்ற நிர்வாகிகள் சத்தியநாராயணவை துளைத்து எடுத்துள்ளனர்.
‘தலைவர் தனிக்கட்சி ஆரம்பிக்கப் போகிறாரா? அல்லது தாமரைக் கட்சியில் சேரப் போகிறாரா? இல்லையென்றால் வழக்கமான வாடிக்கையான சந்திப்புதானா? என்று தெளிவு படுத்துங்கள்’ என ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு சத்திய நாராயணாவால் உறுதியான பதில் அளிக்க முடியவில்லை என கூறப்படுகிறது.
ஏப்ரல் 12,17 ஆகிய திகதிகளில் தலைவர் உங்களை சந்திக்கும் போது இந்தக் கேள்விகளுக்கு உறுதியான பதில் அளிப்பார் என சத்திய நாராயணா நழுவியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே தனது அரசியல் நகர்வு குறித்து வெவ்வேறு கட்சிகளில் இருக்கும் தனது நண்பர்களை தனியாக சந்தித்து ரஜினி ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இப்போது இருக்கும் அரசியல் சூழலில் தனிக்கட்சி ஆரம்பித்தால் எப்படி இருக்கும்? இல்லை பா.ஜ.க.வுடன் சென்றால் தமிழகத்தில் ஒரு மாற்றத்தை உண்டாக்க முடியுமா? என பல்வேறு கோணத்தில் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.