பிரபல ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் அலைபேசி மற்றும் அழைப்புகள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன என்றும் அவ்விசாரணைகளுக்கான மேலதிக காலஅவகாசம் தேவைப்படுவதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் டிலான் ரத்நாயக்க கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் அறிவித்தார்.
இந்த வழக்கு, கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் ஜெயராம் ட்ரொஸ்கி முன்னிலையில் நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டபோதே மேற்கண்ட அறிவிப்பு விடுக்கப்பட்டது.
கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தின் வழக்குப் பொருட்கள் காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ள வசீம் தாஜுதீனின் அலைபேசியைப் பரிசீலிப்பதற்காக பொலிஸ் கணினிப் பிரிவுக்கு அனுப்புவதற்கு உத்தரவிடுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விடுத்த கோரிக்கைக்கு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம், கடந்த அமர்வில் அனுமதி வழங்கியிருந்த நிலையிலேயே மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.
2012ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் 2015ஆம் ஆண்டு ஓகஸ்ட் 3ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள், தாஜுதீனின் நொக்கியா ஈ 71 1 அலைபேசியில் இருந்த அழைப்புகள், குறுஞ்செய்திகள் தொடர்பில் பரிசீலிப்பதற்கே, சீ.ஐ.டியினரால் அனுமதி கோரப்பட்டிருந்தது.
மேலும், முன்னாள் பிரதான சட்டவைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகரவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நாளொன்றுக்கு 6 மணித்தியாலங்கள் வரை வாக்குமூலம் பெறப்படுவதாகவும் அதை 3 மணித்தியாலங்களாகக் குறைக்குமாறும் சமரசேகர சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஷவேந்திர பெர்னாண்டோ கோரினார்.
அதன்பின்னர், வழக்கின் தற்போதைய நிலை தொடர்பான மேலதிக விசாரணை அறிக்கை குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து, ஜனவரி 26ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
2012ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதியன்று நாரஹேன்பிட்டி சாலிகா விளையாட்டு மைதானத்துக்கு அருகில் காரொன்றுக்குளிருந்து தாஜுதீன் சடலமாக மீட்கப்பட்டார்.
முதலில் அது விபத்து என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனையில் அவர் படுகொலைசெய்யப்பட்டு காருடன் எரிக்கப்பட்டிருந்தமை சி.ஐ.டியினரின் விசாரணையில் தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது.