சிறுமி ஹாசினி கொலை வழக்கில், வரும் 19-ம் தேதி தீர்ப்பளிக்கப்பட உள்ளது. இந்த வழக்கில் கைதான தஷ்வந்த், சிறையில் எப்படி இருக்கிறார் என்று விசாரித்தபோது, புதிய தகவல்கள் கிடைத்தன.
தஷ்வந்த்தின் ஃப்ளாஸ்பேக்
சென்னையை அடுத்த போரூர் முகலிவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் குடியிருந்தவர் தஷ்வந்த். இவரது தந்தை சேகர். தாய் சரளா. தனியார் கம்பெனி ஒன்றில் வேலைபார்த்தவர் சேகர். தஷ்வந்த்தை இன்ஜினீயரிங் வரை படிக்கவைத்தனர். வேலைக்குச் சென்ற தஷ்வந்த்தின் வாழ்க்கை திசைமாறியது. அதாவது, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், தஷ்வந்த் குடியிருந்த வீட்டின் அருகே குடியிருந்த ஹாசினி என்ற சிறுமி மாயமாகிவிட்டதாக போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. ஹாசினியை தஷ்வந்த்தும் தேடினார். ஒருகட்டத்தில், தஷ்வந்த்தின் நடவடிக்கைமீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை உன்னிப்பாகக் கவனித்த போலீஸார், சந்தேகத்தின்பேரில் தஷ்வந்த்திடம் விசாரித்தனர். விசாரணையில், சிறுமி ஹாசினியை பாலியல் வன்கொடுமை செய்ததோடு அவரது உடலை சாக்குமூட்டையில் வைத்து பைபாஸ் சாலையின் அருகே எரித்துக் கொன்றதாகத் தெரிவித்தார். இது, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து, தஷ்வந்த் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து, அவர்மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. இந்தச் சமயத்தில், தஷ்வந்த்தின் உறவினர்கள் நீதிமன்றத்தின்மூலம் குண்டர்சட்டத்தை ரத்துசெய்தனர். மூன்று மாதங்களுக்குள் போலீஸார் குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்யாததால், ஜாமீனில் வெளியில் வந்தார். சிறுமி கொலைக்குப் பிறகு தஷ்வந்த்தின் பெற்றோர், குன்றத்தூருக்குக் குடிபெயர்ந்தனர். நீதிமன்ற வழக்குச் செலவுகளால் தஷ்வந்த் குடும்பத்தினருக்கு பொருளாதாரச் சுமை ஏற்பட்டது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. ஆனால், தஷ்வந்த் எதையும் கண்டுகொள்ளவில்லை.
இந்தச் சமயத்தில், கடந்த டிசம்பர் 2-ம் தேதி, வீட்டில் தனியாக இருந்த தஷ்வந்த்தின் அம்மா சரளா கொலை செய்யப்பட்டார். அவர் அணிந்திருந்த நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக குன்றத்தூர் போலீஸார் விசாரித்தனர். விசாரணையில், பெற்ற தாயை நகை, பணத்துக்காக தஷ்வந்த் கொலை செய்தது தெரியவந்தது. இந்த வழக்கில், தஷ்வந்த்தை போலீஸார் தீவிரமாகத் தேடியபோது, மும்பையில் அவர் பதுங்கியிருக்கும் தகவல் கிடைத்தது. மும்பையில் தஷ்வந்த்தை மடக்கிப்பிடித்த போலீஸார், சென்னைக்கு விமானத்தில் அழைத்துவர முடிவுசெய்தனர். ஆனால், கைவிலங்குவுடன் தஷ்வந்த் போலீஸாரிடமிருந்து தப்பினார். இதையடுத்து, போலீஸாரின் தீவிர தேடுதலுக்குப் பிறகு, தஷ்வந்த்தைக் கைதுசெய்தனர்.
இந்த நிலையில், சிறுமி ஹாசினியைக் கொலை செய்த வழக்கு விசாரணை, செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. சரளாவைக் கொன்ற பிறகு, தஷ்வந்த் தரப்பில் எந்த வழக்கறிஞர்களும் ஆஜராகவில்லை. இதனால், அவரே நீதிமன்றத்தில் வாதாடினார். 35 சாட்சிகளிடம் நடைபெற்ற விசாரணை சமீபத்தில் முடிவடைந்தது. வழக்கில் விசாரணை முடிந்த நிலையில், வரும் 19-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டுள்ளார்.
சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தீர்ப்பு வெளிவர இன்னும் இரண்டு தினங்களே உள்ளன. இந்தச் சமயத்தில், தஷ்வந்த் சிறையில் எப்படி இருக்கிறார் என்று சிறைத்துறையினரிடம் விசாரித்தோம். ‘அதிகாலையிலேயே எழுந்துவிடுகிறார். காலைக்கடன்களை முடித்துவிட்டு உடற்பயிற்சி மேற்கொள்கிறார். அதன்பிறகு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிறைவாசிகளிடம் அரட்டையடிக்கிறார். ஓய்வு நேரத்தில்கூட அவரது கவனம் சட்டப்புத்தகங்கள் மீதே உள்ளது. இரவில், நீண்டநேரம் சட்டப்புத்தகங்களை வரிவிடாமல் படிக்கிறார். நீதிமன்றத்தில் வாதாடவே அவர் சட்டப்புத்தகங்களைப் படித்துவருகிறார். மற்றபடி வழக்கம்போல அவரது செயல்பாடுகள் உள்ளன’ என்றனர்.
சிறுமி ஹாசினியின் வழக்கைத் தொடர்ந்து, சரளா கொலை வழக்கையும் விரைந்து முடிக்க போலீஸார் முடிவுசெய்து, அதற்கான பணிகளைத் துரிதப்படுத்திவருகின்றனர். இதற்கிடையில், தஷ்வந்த் மீது குன்றத்தூர் போலீஸ் நிலையத்தில் கேஸ் ஹிஸ்ட்ரி தொடங்கப்பட்டுள்ளது. அதில், ஹாசினி கொலை, சரளா கொலை, மும்பையில் போலீஸிடமிருந்து தப்பியது என அவர் தொடர்பான விவரங்கள் உள்ளன.