நல்லிணக்கத்தின் அலைவரிசை என்ற பெயரில் புதிய தொலைக்காட்சி சேவையொன்றை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்;டில் அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளரும் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த தொலைக்காட்சி அலைவரிசைக்காக வடமாகாணத்தில் கலையகக்கட்டடத்தொகுதி ஒன்றை அமைப்பதற்கு காணி சுவீகரிக்கப்படவுள்ளது.
இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனத்தில் இரண்டாவது அலைவரிசையாக 2000ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்ப்பிரிவான ஐ (EYE) தொலைக்காட்சி அலைவரிசையில் பெருமளவிலான நேரம் விளையாட்டு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுவதினால் தமிழ்மொழிபேசும் மக்களுக்காக விசேடமாக வடக்கு கிழக்கு மக்களுக்காக தொலைக்காட்சியின் தேவை தற்பொழுது ஏற்பட்டுள்ளது.
தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதில் இவ்வாறான தொலைக்காட்சி அலைவரிசையொன்று இருப்பது பெரும் பின்புலமாக அமையும் என்பதினால் நல்லிணக்க தொலைக்காட்சி அலைவரிசை என்ற பெயரில் புதிய தொலைக்காட்சி சேவையொன்று அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய தொலைக்காட்சி அலைவரிசைக்காக தொழில்நுட்ப உபகரணம் தற்பொழுது பெறப்பட்டுள்ளன. இதன் ஒளிபரப்பிற்காக வடமாகாணத்தில் கலையக கட்டடத்தொகுதி ஒன்று நிர்மாணிக்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. சாவகச்சேரி பிரதேசத்தில் உள்ள யாழ்ப்பாணம் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியினால் பராமரிக்கப்டுகின்ற காணியொன்று அதாவது 100 பேர்ச் நிலப்பரப்பில் இதற்கான கலையக கட்டடத்தொகுதியை அமைப்பதற்கு யாழ் மாவட்ட செயலாளரினால் வழங்கப்பட்டுள்ளது.
இந்த காணியில் இலங்கை ரூபவாகினிக்கூட்டுத்தாபனத்திற்கு பெற்றுக்கொள்வது தொடர்பில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.