தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்! வெளியானது அதிகாரப்பூர்வ தகவல்!!.
தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மாரடைப்பினால் மரணமடைந்துள்ளார் என அப்பல்லோ மருத்துவமனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
மாரடைப்பினால் இன்றைய தினம் அவர் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையல் அவருக்கு வழங்கிய சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 22ம் திகதி நீர்ச்சத்துக்கு குறைபாடு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, தொடர் கண்காணிப்பில் இருந்துவந்தார்.
அவரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்ததைத் தொடர்ந்து அவர் கடந்த வாரம் சாதாரண மருத்துவ அறைக்கு மாற்றப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
இதற்கிடையில் நேற்று மாலை திடீரென முதல்வர் ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.
இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டிருந்ததோடு, அப்பல்லோ மருத்துவமனைக்கு முன்பாக அதிமுக தொண்டர்கள் குவிந்தனர்.
மேலும் வதந்திகள் பரவியதை அடுத்து, பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்தினர்.
இந்நிலையில் மருத்துவர்கள் முதலமைச்சருக்கு தீவிர சிகிச்சைப் அளித்து வந்தனர். தொடர் கண்காணிப்பில் ஜெயலிலதா வைக்கப்பட்டிருந்தார்.
முன்னதாக முதல்வருக்கு மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டுவருவதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் மும்பையில் இருந்து சென்னைக்கு விரைந்தார்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து நேராக மருத்துவனைக்குச் சென்ற அவர் பத்து நிமிடங்களில் மருத்துமனையில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.
இதற்கிடையில் முதல்வரின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக இன்றைய தினம் அப்பல்லோ நிர்வாகக் குழு அறிக்கை வெளியிட்டது.
இந்நிலையில் தான் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என செய்திகள் தெரிவிக்கின்றன.
முன்னதாக தமிழக முதலமைச்சருக்கு வழங்கிய சிகிச்சை பலனின்றி அவன் உயிர் பிரிந்தது என்று தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இதனால் மக்கள் மத்தியில் பெரும் சோகம் ஏற்பட்டிருந்தது. ஆனால் ஊடகங்களில் வெளியாகியிருந்த செய்தி தவறானது என்றும். அது வெறும் வதந்தி என்றும் அப்பல்லோ நிர்வாகம் அறிவித்திருந்தது.
முதல்வர் ஜெயலலிதா காலமானார் என்ற செய்தி வெறும் வதந்தி என்றும். முதல்வருக்கு தீவிர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையிலேயே இப்பொழுது இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இன்று மாலை அதிமுக சட்டசபை உறுப்பினர்களுக்கான கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்து முடிந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.