தமிழக முதல்வராக பொறுப்பேற்கபோவதில்லை..சசிகலா திடீர் முடிவு? வெளியான பரபரப்பு தகவல்!
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பின்பு அதிமுக கட்சியை வழி நடத்திச் செல்பவர் சசிகலா. ஜெயலலிதா வகித்து வந்த பொதுச் செயலாளர் பதவி கூட சசிகலாவுக்கே வழங்கப்பட்டது. அதன் பின்னர் சசிகலா தான் கட்சிக்கு எல்லாம் என்றும் அவர் தான் நமக்கு எல்லாம் எனவும் அமைச்சர்கள் உட்பட பலரும் கூறிவருகின்றனர்.
பொதுச்செயலாளராக இருந்தால் மட்டும் போதாது, சசிகலா தமிழகத்தின் முதல்வராக வேண்டும் என அதிமுக கட்சி நிர்வாகிகள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதற்கு சசிகலா தரப்பில் எந்த ஒரு பதிலும் இதுவரை வரவில்லை. இதனால் அவர் முதல்வர் ஆவதற்கு வாய்ப்பு உண்டு என தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் சசிகலா முதல்வர் ஆவதற்கு சற்று தாமதம் ஆகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. காரணம், மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.
ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போதே இந்த வழக்கு முடிக்கப்பட்டுவிட்டதாக கூறப்பட்டது. இதனால் சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு தனக்கு சாதகமாகத்தான் வரும் என சசிகலா தீர்க்கமாக நம்பி வந்தார்.
இந்நிலையில் தற்போது ஜெயலலிதா மறைவால் இந்த வழக்கில் தீர்ப்பு தனக்கு பாதகமாக வருமோ என சசிகலா அச்சமடைந்துள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனால் சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக கிருஷ்ணமூர்த்தி என்பவரை சசிகலா தரப்பு டெல்லிக்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக 20 ஆம் திகதி வரை தான் முதல்வராக பதவியேற்க போவதில்லை என சசிகலா முடிவு செய்துள்ளாராம்.
தீர்ப்பு திகதி தள்ளிப்போனால் முதல்வராக பதவியேற்கும் நாள் மேலும் தள்ளிப்போகும் என்றும் அதிமுக வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்த பிறகு ஒருவழியாக முதல்வராக பதவியேற்றுக்கொள்ளலாம் என சசிகலா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.