தமிழகத்தில் கருணாநிதி திடமாக இருந்தபோதும், ஜெயலலிதா இறப்பதற்கு முன்பும் எந்த பிரச்னையும் இல்லாமல் இருந்தது. தற்போது திடமான தலைமை இல்லை என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
நாகர்கோவிலில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”
கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிரான உணர்வுகளை பரப்புவதில் காங்கிரஸ் அரசு கண்ணும் கருத்துமாக உள்ளது. காவிரி பிரச்னை மற்றும் விஜய் பட விவகாரத்தில் தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள்.
தமிழகத்தில் கருணாநிதி திடமாக இருந்தபோதும், ஜெயலலிதா இறப்பதற்கு முன்பும் எந்த பிரச்னையும் இல்லாமல் இருந்தது. தற்போது திடமான தலைமை இல்லை என்பது நூற்றுக்கு நூறு உண்மை.
நவோதயா பள்ளியை தமிழகத்தில் கொண்டுவர வேண்டும் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் கூறியபோது அவர் எதிர்க்கவில்லை. கடந்த ஆண்டு 63 நவோதயா பள்ளிகள் திறந்தபோது 10 பள்ளிகள் தமிழகத்துக்கு வேண்டும் என கூறினேன். திமுக நவோதயாவை எதிர்க்கிறது.
தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகம் உள்ளது. டெங்குக்கு எதிராக மாநில அரசு எடுத்துவரும் நடவடிக்கை பாராட்டுக்குரியது. அந்தந்த மாவட்ட நிர்வாகம் டெங்கை ஒழிக்க தனி கவனம் செலுத்த வேண்டும். டெங்கு தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்” என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.