தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்த 5 வயது சிறுவன்
தனது வீட்டிலிருந்த துப்பாக்கியை எடுத்து விளையாடிய 5 வயது சிறுவன் ஒருவன் தவறுதலாக தன்னைத் தானே தலையில் துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்த விபரீத சம்பவம் அமெரிக்க ஒஹியோ மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் நேற்று திங்கட்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
சின்சினதி பிராந்தியத்தில் வசிக்கும் சின்சியர் பீக் என்ற சிறுவனே இவ்வாறு தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்துள்ளான். அவன் கடந்த மாதம் தனது ஐந்தாவது பிறந்தநாளைக் கொண்டாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தனது மகன் குளியலறைக்கு சென்றுள்ளதாகக் கருதி அவனது தாயார் தனது அன்றாட பணியில் ஈடுபட்டிருந்த வேளை அந்த வீட்டின் மாடிக்கு சென்ற சிறுவன் அங்கு காணப்பட்ட துப்பாக்கியை எடுத்து விளையாடிய போதே இந்த விபரீதம் இடம்பெற்றுள்ளது.
மேற்படி துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற போது மாடியிலுள்ள அறையில் சின்சியர் பீக்கின் சகோதரனான ஒமாரியன் ( 11 வயது ) உறங்கிக் கொண்டிருந்துள்ளான்.
சிறுவன் எடுத்து விளையாடிய துப்பாக்கி யாருடையது என்பது தொடர்பில் தகவல் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் பிராந்திய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.