தண்ணீரில் மிதந்த சுவிஸ்: 150 ஆண்டுகளுக்கு பின்னர் கொட்டித்தீர்த்த மழை
சுவிட்சர்லாந்தின் பாசெல் மாகாணத்தில் கடந்த ஆறு மாதத்தில் மட்டும் கொட்டித் தீர்த்த மழையின் அளவு இரு மடங்காக அதிகரித்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆறு மாதத்தில் மட்டும் பாசெல் மாகாணத்தில் பெய்த மழையின் அளவு 732 மில்லி மீற்றர் என தெரிவித்துள்ள சுவிஸ் வானிலை ஆய்வு மையம், இது கடந்த ஆண்டை விடவும் இரு மடங்கு என தெரிவித்துள்ளது.
மட்டுமின்றி 1864 ஆம் ஆண்டிற்கு பின்னர் வரலாறு காணாத வகையில் மழை கொட்டித்தீர்த்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
கடந்த 2001 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையான மாதங்களில் பதிவான மழையின் அளவு 639 மில்லி மீற்றர் என தெரிவித்துள்ள அதிகாரிகள், அது இந்த ஆண்டு முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
பாசெல் மாகாணம் அளவுக்கும் அதிகமான மழையால் அவதிக்கு உள்ளாகையில், சுவிட்சர்லாந்தின் பெரும்பாலான மாகாணங்கள் கடந்த 6 மாதங்களாக போதிய அளவு மழை இன்றி தவித்துள்ளது.
இதில் சூரிச், Lucerne மற்றும் St Gallen ஆகிய மாகாணங்கள் மட்டும் சராசரி அளவை விடவும் கூடுதலாக மழையை பெற்றுள்ளது.
மழை காரணமாக மே மற்றும் ஜூன் மாதங்களில் சுவிட்சர்லாந்தின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படுவதும், சாலைகள் மூடப்படுவதும், கிராமங்களில் பெருவெள்ளம் ஏற்படுவதும், பனிப்பொழிவு என ஒட்டுமொத்தமாக மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
இருப்பினும் ஜூன் இறுதி முதல் அதிக வெப்பமுடன் வரண்ட வானிலை தென்படும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.