டி-20 போட்டிகளின் ஆதிக்கம் அதிகரித்து உள்ளூர் அளவில் தற்போது டி10 போட்டிகள் நடைபெறும் அளவுக்கு கிரிக்கெட் போட்டிகள் மாற்றம் அடைந்துள்ளன. ஆனால், டி20 போட்டிகளின் வரவு டெஸ்ட் போட்டிகளை அழித்து விடும் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.
சமீபகாலமாக டெஸ்ட் போட்டிகளைக் காண மைதானங்களுக்கு மிக குறைந்த அளவிலே மக்கள் வருகிறார்கள். இதனால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு டெஸ்ட் கிரிக்கெட் எதிர்காலம்குறித்து பல்வேறு பரிந்துரைகள் வந்தது. அதில் முக்கியமான ஒரு பரிந்துரை, 4 நாள்கள் கொண்ட டெஸ்ட் போட்டிகளுக்கு அனுமதி வழங்குவது. ஐ.சி.சி-யும் இதுகுறித்து ஆலோசித்து சோதனை அடிப்படையில் நான்கு நாள் டெஸ்ட் போட்டிக்கு அனுமதி வழங்கியது. இதனால் சிறிய அணிகள் பெரிய அணிகளுக்கு கடும் சவால் அளிக்க முடியும்.
அதன்படி இன்று சர்வதேச அளவில் முதல் 4 நாள் டெஸ்ட் போட்டி நடைபெறயுள்ளது. தென்னாப்பிரிக்கா- ஜிம்பாப்வே அணிகள் இன்று 4 நாள் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளனர். தென்னாப்பிரிக்காவின் போர்ட் எலிசபத் நகரில் நடைபெறும் இந்தப் போட்டி இன்று மாலை இந்திய நேரப்படி 5 மணிக்குத் தொடங்குகிறது. தென்னாப்பிரிக்கா இந்தப் போட்டியை அடுத்து நடைபெறவுள்ள இந்திய தொடருக்கான முன்னோட்டமாகப் பார்க்கிறது. இதனால் டிவில்லியர்ஸ், ஸ்டெய்ன், மோர்கல், அம்லா என முழு படையும் களமிறக்குகிறது.
5 நாள் டெஸ்ட் போட்டிகள் தொடர்ந்து நடைபெறுமா என்பதை ஐ.சி.சி தான் முடிவு செய்யும் என்றாலும், இன்றையப் போட்டி வரலாற்றில் இடம் பிடிப்பது மட்டும் நிச்சயம்.