பொது வேட்பாளர் விடயத்தை முன்னெடுக்கும் குழுவுடன் ஜே.வி.பியினர் சந்திப்பொன்றை நடாத்தி, அதில் இரு தரப்பினருக்கு இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டால், பொது வேட்பாளர் விடயம் கைவிடப்படுமா? என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறிரங்கேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (04) நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
தமிழரசுக் கட்சிக்குள் உட்பூசல் உச்சமடைந்திருந்த சமயத்தில் பொது வேட்பாளர் தொடர்பாக தமிழரசுக் கட்சி தங்களுக்குள் உள்ள தலைமைப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்த பின் தங்களிடம் பேச வரட்டும் என ஏளனமாக கூறிய சுரோஸ் பிரேமச்சந்திரன் தற்போது தமிழரசுக் கட்சி சரியான முடிவை மிக விரைவாக எடுத்து எல்லோருடனும் இணைந்து பயணிப்பதானது தேவையான விடயம் என இரந்து நிற்பதை காணக்கூடியதாக உள்ளது.
ஆயினும், தமிழரசுக் கட்சி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனம் வந்த பின்னர் தமது முடிவை எடுக்கவுள்ளதாக கூறிவருகின்றது. அதேவேளை பொது வேட்பாளர் என்பது ஒரு விஷப் பரீட்சை என அக்கட்சி தெரிவித்துள்ளது.
அதேவேளை, எதிர்வரும் 9 ஆம் திகதி பொது வெளியில் இது தொடர்பாக விவாதிப்பதற்கு அறிவித்தல் ஒன்றையும் விடுத்துள்ளது.
அதில், எவ்வாறான நிலைப்பாட்டை தமிழரசு கட்சியினர் எடுப்பார்கள் என்பதை தெரிந்து கொண்ட சுரேஸ் அணியினர் மிக மிக விரைவாக முடிவெடுக்குமாறு கோரியுள்ளனர்.
அத்துடன், ஜே.வி.பினர் பொது வேட்பாளர் தொடர்பான தரப்பினரை எதிர்வரும் வாரம் சந்திக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இச்சந்திப்பின்போது ஜே.வி.பியினருடன் பொது இணக்கப்பாடு ஒன்று எட்டப்பட்டால் தத்தமது நலன்களுக்காக முகவர்களுக்கு பின்னால் இருந்து இயங்கும் இவர்கள் பொது வேட்பாளர் விடயம் கைவிட்டுவிடுவார்களா? அதன்பின்னர் மக்களுக்கு எதை கூறி மீண்டும் ஒரு நாடகத்தை அரங்கேற்றுவார்கள் ? என மேலும் தெரிவித்திருந்தார்.