ஜேர்மன் நாட்டை சேர்ந்த கால்பந்து வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அந்நாட்டிற்கு சொந்தமான ராணுவ வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
ஜேர்மன் நாட்டை சேர்ந்த Borussia Dortmund அணியை சேர்ந்த கால்பந்து வீரர்கள் மோனோக்கோவிற்கு எதிராக விளையாட தயாராகி வந்துள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஹொட்டல் அறையில் இருந்து பேருந்து ஒன்றில் விளையாட்டு வீரர்கள் பயணம் மேற்கொண்டபோது அடுத்தடுத்து 3 வெடிகுண்டுகள் வெடித்துள்ளது.
அதிர்ஷ்டவசமாக இத்தாக்குதலில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. எனினும், விளையாட்டு வீரர் ஒருவருக்கு படுகாயம் ஏற்பட்டது.
இத்தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து விளையாட்டு போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டன. இத்தாக்குதலுக்கு எந்த அமைப்பினரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
இந்நிலையில், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளை பொலிசார் பரிசோதனை செய்தபோது ஓர் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
வெடிகுண்டுகளை தயாரிப்பதற்கான உபரி பாகங்கள் ஜேர்மன் நாட்டின் ராணுவத்திற்கு சொந்தமானது என்ற திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜேர்மன் பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள இத்தகவல் உண்மையானதா என இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
செய்திதாளில் வெளியான இத்தகவலை தொடர்ந்து புலன் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.