ஜேர்மனியில் வெட்டுக்கத்தியால் தாக்கிய மர்ம நபர்: ஒருவர் உயிரிழப்பு, 2 பேர் படுகாயம்
ஜேர்மனி நாட்டின் ஸ்டட்கார்டு பகுதியில் நடத்தப்பட்ட வெட்டுக்கத்தி தாக்குதலில் பெண் ஒருவர் பரிதாபமாக கொல்லப்பட்டார். மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
ஜேர்மனியின் ஸ்டட்கார்டு நகரில் உள்ள ரீட்லின்ஜென் பகுதியில் இளைஞர் ஒருவருக்கும் கொல்லப்பட்ட பெண்ணுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தீடீரென வெட்டுக் கத்தியால் அந்த நபர் தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிய வந்துள்ளது.
இந்த தாக்குதலில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் பரிதாபமாக கொல்லப்பட்டார். மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.
தாக்குதலில் ஈடுபட்ட நபர் சிரியாவை சேர்ந்த 21 வயதான இளைஞர் என்பதும் பொலிசாருக்கு ஏற்கனவே தெரிந்தவர் என்றும் கூறப்படுகிறது.
தாக்குதல் நடைபெறுவதற்கு முன்பாக ஒரு ஆணும், பெண்ணும் பேருந்து நிலையத்திற்கு அருகில் சண்டையிட்டு கொண்டு இருந்ததாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். வெட்டுக் கத்தி தாக்குதலில் ஈடுபட்ட நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
ஜேர்மனியின் பாவரியா பகுதியில் ஓடும் ரயிலில் கடந்த வாரம் கோடரியால் தாக்கிய சம்பவம் நடைபெற்றது. நேற்று முனிச் பகுதியில் வாலிபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் இன்று ஸ்டட்கார்டு நகரில் வெட்டுக் கத்தி தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.