மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டு, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட அபராதம் தொடர்பாக கர்நாடக அரசு மனு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவை ஏப்ரல் 5-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது உச்சநீதிமன்றம்.
பெப்ரவரி மாதம் 14-ம் தேதி உச்சநீதிமன்றம் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதில், ஜெயலலிதா இறந்து விட்ட காரணத்தால், மற்ற மூவருக்கும், சிறப்பு நீதிமன்றம் நான்காண்டு சிறை தண்டனை அளித்து பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தது.
அதன்பிறகு, கர்நாடக அரசு மார்ச் 21-ஆம் தேதி சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தது.
அதில், ஒருவர் இறந்து விட்ட காரணத்தால், அவர் மீதுள்ள குற்றச்சாட்டு முடிவுக்கு வந்து விட்டதாகக் கூற முடியாது. இந்த வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட பிறகுதான் ஜெயலலிதா இறந்தார் என்று சுட்டிக்காட்டியுள்ளது.
ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு எதிரான மேல்முறையீட்ட வழக்கின் தீர்ப்பு, 2016ம் ஆண்டு ஜூன் 7ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
அவர் இறந்தது டிசம்பம் 5ம் தேதிதான். அதனால், வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட பிறகு, ஒருவர் இறந்து விட்டால், அவர் மீதுள்ள குற்றச்சாட்டுக்கள் முடிவுக்கு வந்த்தாகக் கூற முடியாது.
அதனால், எப்போது உச்சநீதிமன்றம் சிறப்பு நீதிமன்றம் அளித்த தண்டனையை உறுதி செய்ததோ அப்போது ஜெயலலிதா மீதான குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்பட்டதாக அறிவிக்க வேண்டும்.
பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, அவருடைய சொத்துக்களை விற்று 100 கோடி ரூபாய் அபராதத்தை, அவரது சொத்துக்களை விற்று பறிமுதல் செய்ய வேண்டும் என கர்நாடக அரசின் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதனால், ஏப்ரல் 5ம் தேதி இந்த வழக்கு நீதிபதிகளின் அறையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம் என்று தெரிகிறது.
சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பாமலே நீதிபதிகள் முடிவு செய்யலாம்.
ஒரு வேளை, ஜெயலலிதா தொடர்பாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவேண்டும் என்று விரும்பினால், முறையாக நோட்டீஸ் அனுப்ப முடிவெடுத்தால், சசிகலா மற்ற மூவருக்கும் நோட்டீஸ் அனுப்பவும் வாய்ப்பு உண்டு.
மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பளித்த பினாயகி சந்திரகோஷ் மே மாதம் ஓய்வு பெறுகிறார். அதற்கு முன்பாக இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டு விடும் .
அதனால், சீராய்வு மனு தொடர்பாக உடனடியாகத் தீர்ப்பு வர வாய்ப்பு உண்டு என்று சட்ட விவகாரச் செய்தியாளர் வெங்கடேசன் தெரிவித்தார்.