ஜெயலலிதாவின் உயிரைக் குடித்த மருந்துகள்!
சினிமா, அரசியல் என ஈடுபட்ட துறைகளில் ஒரு மகாராணியைப் போல வாழ்ந்தவர் ஜெ. ஆனால் பிற்காலத்தில் தனது உடல் மீது அவர் உரிய கவனம் செலுத்தியிருந்தால் நிச்சயம் காப்பாற்றியிருக்கலாம்” என்கிறது போயஸ் கார்டன் வட்டாரம்.
“தண்ணீரிலும் வெந்நீரிலும் குளிப்பது பெரும்பாலானவர்கள் வழக்கம். ஆனால், ஜெ. பன்னீரில்தான் குளிப்பார். கீழே விழும் கர்சிப்புகளை கூட திரும்பப் பயன்படுத்த மாட்டார். அவரை எதிர்த்து யாரும் ஒரு வார்த்தை பேச முடியாது’ என அவருடன் பழகியவர்கள் அவரது வாழ்க்கை முறை பற்றி குறிப்பிடுவார்கள்.
“”15,000 புத்தகங்கள் கொண்ட நூலகத்துடன் இணைந்த அவரது தனிப்பட்ட அறையை திறந்து மூடும் ரிமோட் அவரிடம்தான் இருக்கும். அவரைத் தவிர, சசிகலா மட்டுமே அந்த அறைக்குப் போகும் அதிகாரம் படைத்தவர்.
அவர் போவதாக இருந்தாலும் கூட ஜெ.விடம் கேட்டுவிட்டுத்தான் போகமுடியும். அறைகளை அழகுபடுத்துவதிலிருந்து நடை, உடை என அனைத்தையும் ஒழுங்காக அழகுடன் வைத்திருந்த ஜெ., உடல்நலத்தில் கோட்டை விட்டுவிட்டார்” என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
அட்மிட்டாகியிருந்த நாட்கள்வரை ஜெ.வின் உடல்நிலை குறித்த உண்மைகளை மறைத்து வந்த அப்பல்லோ, கடந்த 7-ந் தேதி வெளியிட்ட அறிக்கையில் அவரது நீண்டநாள் உடல்நல கோளாறுகளை வெளிக் கொண்டு வந்துள்ளது.
106 கிலோ எடை கொண்ட ஜெ.வுக்கு ர்க்ஷங்ள்ண்ற்ஹ் எனப்படும் மிகு எடை கொண்ட உடல்வாகு. அவரது அண்ணன், அம்மா என குடும் பத்தினர் அனைவருக்கும் இருந்ததுபோல ஜெ.வுக்கும் அது ஒரு பெரிய குறைபாடாக இருந்துள்ளது.
பருத்த உடல்வாகு கொண்டவர்களுக்கு உரிய குறை பாடான Hypothyrodism எனப்படும் தைராய்டு சுரப்பு குறைபாடு இருந்துள்ளது. குளிர்காலம் வந்தால் மூச்சுத்திணறல் ஏற்படும் அளவிற்கு ரத்தத்தில் ஈசினோபீலியா என்கிற வேதிப்பொருளின் தாக்கம் இருந்தது.
இத்துடன் ரத்தக்கொதிப்பும் சேர்ந்திருந்தது. கட்சி நிகழ்ச்சிகளில் ஜெ. பங்கேற்பது என்பதே அரிதும் ஆச்சரியமானதுமாகும். அவருக்கான பொதுக் கூட்ட மேடைகளில் கூட தவறாமல் கழிப்பறை அமைக்க வேண்டிய அளவுக்கு பவல்சிண்ட்ரோம் பிரச்சினையும் இருந்தது.
கூடவே உடல் முழுதும் தோல் வியாதியினால் அரிப்பும் இருந்ததாக அப்பல்லோ மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
இந்த நோய்களை கட்டுப்படுத்த என்னென்ன மருந்துகளை ஜெ. உப யோகித்தார் என போயஸ் கார்டனுக்கு நெருக்கமான வட்டாரங்களைக் கேட்டோம்.””ரத்தக்கொதிப்பினால் ஜெ. அதிகம் கோபப்படுவார். “உயர் ரத்தஅழுத்தத்தை கட்டுப் படுத்த Beta Blocker என்கிற மருந்தை ஜெ. உபயோகித்தார்’ என அப்பல்லோ மருத்துவ அறிக்கை சொல்கிறது.
“இந்த பீடா பிளாக்கர் என்பது பழையகாலத்து மருந்து. இந்த மருந்தை நவீனகால மருத்துவர்கள் உயர் ரத்தஅழுத்தம் உள்ள நோயாளிகளுக்கு தரமாட்டார்கள். அதைத்தாண்டி எத்தனையோ புதிய வகை எளிய மருந்துகள் வந்துவிட்டன.
ஜெ.வுக்கு இந்த பழைய மருந்தையே கொடுத்தவர்கள் நிச்சயம் சிறந்த டாக்டர்களாக இருக்க முடியாது’ என அடித்துச் சொல்கிறார்கள் சில மருத்துவத்துறை வல்லுநர்கள்.
உயர் ரத்தஅழுத்தம் உள்ள நோயாளிகளுக்கு இதயத்திலும் மூளையிலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.பீடா பிளாக்கர் என்கிற இந்த மருந்தை சாப்பிடும் நோயாளிகளுக்கு மாரடைப்பு வந்தால் அவர்களுக்கு அதை உணரமுடியாத தன்மையை ஏற்படுத்தி, இதயம் அடைபடுவதையோ அது ஏற் படுத்தும் வலியையோ எதையும் உணர முடியாத நிலையை ஏற்படுத்தும்.
அத்துடன் ஜெ.வை போன்ற நீண்டகால சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த மருந்தை அளித்தால் அது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கன்னாபின்னாவென அதிகரிக்கும்.
அதனால்தான் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையாமல் இருந்திருக்கிறது” என்கிறார்கள் பெயர் தெரிவிக்க விரும்பாத மருத்துவர்கள்.
அதேபோல ஜெ.வின் வெண்ணிற தோலை புண்ணாக்கி வந்த தோல் நோய்க்காக ஸ்டிராய்டு கலந்த மருந்துகளை வாய்வழியாக சாப்பிட்டார் என சொல்கிறது அப்பல்லோ அறிக்கை. Atopic Dermalitis என்பதுதான் ஜெ.வுக்கு ஏற்பட்ட தோல் வியாதி.
உடல் முழுவதும் அவ்வப்போது நமைச்சல் உணர்வை உருவாக்கி, அங்கங்கே உடலை சிவப்பாக்கும். இதை Skin Eczema என மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இந்த நோய் தாக்கும் பகுதிகளில் அந்த நோயைப் போக்க, இதே ஸ்டிராய்டுகள் அடங்கிய வெளிப்புறம் பூசும் களிம்புகள் வந்துவிட்டன. சித்தா, ஆயுர் வேதா, யுனானி போன்ற மாற்று மருத்துவ முறைகளில் ஏராளமான மருந்துகள் கிடைக்கின்றன.
இதையெல்லாம் தவிர்த்துவிட்டு ஸ்டிராய்டுகள் அடங்கிய மருந்துகளை வாய்மூலம் உட்கொண்டிருக்கிறார் ஜெ.
“”வலியைக் குறைக்கும் மருந்தான ஸ்டிராய்டை வாய்மூலம் உட்கொள்வதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு தாறுமாறாக உயரும்.
அத்துடன் தைராய்டு மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்களின் உயிருக்கே ஆபத்தாக முடியும். இந்த வாய்வழி உட்கொள்ளும் தோல்நோய் மருத்துவ சிகிச்சையை யார் ஜெ.வுக்கு சிபாரிசு செய்தார்களோ அவர்களை விசாரிக்க வேண்டும்” என்கிறார்கள், ஜெ. விவகாரம் என்பதால் பெயரை தவிர்க்கச் சொல்லும் மருத்துவர்கள்.
இந்த மருந்துகளினால்… அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்த ஜெ.வின் சர்க்கரை அளவு 600 ஆக உயர்ந்திருக்கிறது. சிறுநீர் பாதையில் ஏழு நாட்களாக பாக்டீரியாவின் தாக்குதலினால் தொற்று ஏற்பட்டிருக்கிறது.பெண்களுக்கு மிக மோசமான வலியைத் தரும் இந்த நோய்த் தொற்றினால் ஜெ.வுக்கு ஜுரமும், வயிற்றோட்டமும் ஏழு நாட்களாக இருந்துள்ளது.
அவரது உடலில் ஆக்ஸிஜன் அளவு 48%தான் இருந்தது. அதை உடனடியாக 98 சதவிகிதமாக உயர்த்த முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது என அப்பல்லோ தனது மருத்துவ அறிக்கையில் குறிப்பிடுகிறது.
இந்தப் பிரச்சினைகளோடு வந்த ஜெ.வின் நுரையீரலில் நோய்க்கிருமிகள் தாக்குதலால் தண்ணீர் நிறைந்திருந்தது.
அவரது இதயத்தின் மிட்ரல் வால்வில் 7 மி.மீ. அளவுக்கு அடைப்பு ஏற்பட்டது என்றெல்லாம் அப்பல்லோ கண்டு பிடித்து ஜெ. Acute Respiratory Distress Syndrome Polmilory Odema போன்ற வியாதிகளால் பாதிக்கப்பட்டுள்ளார் என அவரது மருத்துவ அறிக்கையில் குறிப்பிடுகிறது.
தோல் வியாதிக்காக ஸ்டிராய்டு மருந்துகளை ஜெ. தொடர்ந்து சாப்பிட்டதால் அவரால் வலியை தாங்க முடியவில்லை. அதனால் அதிக வலுவான வலிநிவாரணிகளை கொடுக்க வேண்டியுள்ளது.
இது உயிருக்கு ஆபத்தான விஷயம் என குறிப்பிடுகிறது மருத்துவ அறிக்கை.
நுரையீரல் நோய்க்கு சிகிச்சை பெற்றதால் அவரது ரத்தக்கொதிப்பு அதி கரிக்க… ஜெ., 40 சதவிகிதம் இறந்துவிட்டார் என லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே குறிப்பிடும் அளவுக்கு நிலைமை போனது. இறுதியில் மாரடைப் பால் மரணம் என்கிறது அப்பல்லோவின் அறிக்கை.
அப்பல்லோவுக்கு வருவதற்கு முன்பு ஜெ.வுக்கு இருந்தது சாதாரணமாக வயது முதிர்ந்த, குண்டான உடல்வாகு கொண்ட பெண்களுக்கு இருந்த வியாதிகள்தான்.
அதை முறையாக கவனித்து உரிய மருந்துகளால் சிகிச்சை அளித்திருந்தாலே அவர் குணமாகியிருப்பார். அவர் பீடா பிளாக்கர் மற்றும் ஸ்டிராய்டு மருந்துகளை வாய்வழியாக உட்கொண்டார் என அப்பல்லோ அறிக்கைகளே கூறுகின்றன.
உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் தவறான இந்த மருந்துகளை யார் கொடுத்தது? இந்த மருந்துகளை ஜெ. தவிர்த்திருந்தாலே அவரது உடல்நிலை இந்த அளவிற்கு மோசமாகி இருக்காது.
இன்னும் என்னென்ன தவறான மருந்துகளை ஜெ. உட்கொண்டார் என தெரியவில்லை. அதனால்தான் பெண்களுக்கு சாதாரணமாக ஏற்படும் சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்று, நேராக நுரையீரலுக்குப் பாய்ந்து…
அதன்பின் இதயத்திற்கு பாய்ந்து பெரிய நோயாக மாறியது என்கிறார்கள் மருத்துவ உலகைச் சேர்ந்தவர்கள்.
ஜெ.வை மரணத்தை நோக்கித் தள்ளி வந்த இந்த நோய்கள் எல்லாம் அப்பல்லோவில் அட்மிட் செய்யப்பட்டபோது ஆரம்பகட்டத்தில்தான் இருந்தது.
“60 சதவிகிதம் பிழைக்க வாய்ப்புண்டு’ என ரிச்சர்ட் பீலே சொன்ன நிலையில்… ஜெ.வை மரணத்திற்கு தள்ளியது யாருடைய சிகிச்சை என்று கேட்கிறார்கள் ஜெ.வுக்கு நெருக்கமானவர்கள்.
அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டதற்கு மறுநாள் அவர் அங்கிருந்த நர்ஸ் ஒருவரிடம் பேசினார் என்றும், “அம்மா நீங்கள் உயிர் பிழைப்பீர்கள்’ எனச் சொன்ன நர்ஸிடம், “டாடா’ என கை காட்டி “நான் போகிறேன்’ என ஜெ. சொன்னதாகவும், அதுபோலவே அவரை அனுப்பி வைத்து விட்டார்கள் என்கிறார்கள் மருத்துவர்கள்.