ஜெனிவா தீர்மானத்துக்கு 47 நாடுகள் இணை அனுசரணை! இந்தியா உட்பட தெற்காசிய நாடுகள் மறுப்பு
இலங்கையில் நல்லிணக்கம், மனித உரிமைகள், பொறுப்புக்கூறலை ஊக்குவித்தல் என்ற தலைப்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்துக்கு இதுவரையில் 47 நாடுகள் இணை அனுசரணை வழங்கியுள்ளன.
அமெரிக்கா, பிரித்தானியா, மசிடோனியா, மொன்ரனிக்ரோ ஆகிய நாடுகள் இணைந்து முன்வைத்த, இலங்கை தொடர்பான 30/1தீர்மானத்தின் தொடர்ச்சியாக முன்வைத்த 34/ எல்-1 தீர்மானம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 2017 மார்ச் 23 ஆம் நாள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கி ஆதரவு அளிக்குமாறு அமெரிக்கா பகிரங்க அழைப்பு விடுத்திருந்தது. இலங்கையும் இதற்கு இணை அனுசரணை வழங்கி ஆதரவு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், இந்த தீர்மானத்துக்கு இலங்கை தவிர, இதுவரையில் 47 நாடுகள் இணைந்து கொண்டு ஆதரவு அளித்துள்ளன.
அமெரிக்கா, பிரித்தானியா, மசிடோனியா, மொன்ரனிக்ரோ, கனடா, இஸ்ரேல், அவுஸ்ரேலியா, ஜப்பான், நோர்வே, ஜேர்மனி, தென்கொரியா, லிச்ரென்ஸ்ரெய்ன், ஸ்லோவாக்கியா, நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து, அல்பேனியா, பெல்ஜியம், அயர்லாந்து, இந்தோனேசியா, செக் குடியரசு, ஹங்கேரி, ஐஸ்லாந்து, பிரான்ஸ், லிதுவேனியா, ஸ்லோவேனியா, போலந்து, போர்த்துக்கல், ஐவரி கோஸ்ட், பல்கேரியா, கிறீஸ், லத்வியா, சுவீடன், ருமேனியா, பின்லாந்து, மால்டா, ஜோர்ஜியா, நெதர்லாந்து, ஸ்பெய்ன், சைப்பிரஸ், லக்சம்பேர்க், ஒஸ்ரியா, டென்மார்க், இத்தாலி, எஸ்தோனியா, குரோசியா, பொஸ்னியா ஹெர்சகோவினா ஆகிய நாடுகளே இணை அனுசரணை வழங்கியுள்ளன.
எனினும் இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகள் எவையும் இந்த தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்க முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.