திருச்சியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டடத்தில் பேசிய ஊர்க் காவல்படை வீரருக்கு இதுவரை மீண்டும் பணி வழங்கப்படவில்லை என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் திருச்சியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த காவல் படை வீரர் பெல்சன் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மைக்கில் பேசி அசத்தினார்.
இதனையடுத்து பெல்சனை அங்கிருந்து பொலிசார் அழைத்துச் சென்ற நிலையில் இதுவரை அவருக்கு மீண்டும் பணி வழங்கப்பவில்லை என தெரியவந்துள்ளது.
இதுகுறித்து பெல்சன் கூறியதாவது, ஜல்லிக்கட்டு மீது எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. நானும் மாடுபிடி வீரராக இருந்தேன். அந்த உணர்ச்சியால் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசிவிட்டேன்.
அதன்பின் விதிகளை மீறி நடந்து கொண்டதை பொலிசார் சுட்டிக்காட்டி எச்சரித்தனர். தவறை உணர்ந்து, மாநகர காவல் ஆணையர் மற்றும் ஊர்க்காவல் படை அதிகாரிகளிடம் நேரில் மன்னிப்பு கேட்டேன். ஆனால், இதுவரை மீண்டும் எனக்கு பணி வழங்கப்படவில்லை என வருத்தத்துடன் கூறியுள்ளார்.
எனினும், பெல்சன் இன்னும் பணியிலிருந்து நீக்கப்படவில்லை. அவருக்கு மீண்டும் பணி வாய்ப்பு வழங்குவது குறித்து காவல் ஆணையர் முடிவெடுப்பார் என திருச்சி மாநகர ஊர்க்காவல்படை அதிகாரி தெரிவித்துள்ளார்