ஜனாதிபதியின் யாழ்.விஜயம் இரத்து! எதிர்பார்ப்பின் உச்சத்திலிருந்த மக்களுக்கு பெரும் ஏமாற்றம்
யாழ்.குடாநாட்டிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(04) வருகை தருவதாக அறிவிக்கப்பட்ட போதும் நேற்று மாலை அவரது விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக திடீர் அறிவிப்பு வெளியாகியது.
ஜனாதிபதியின் யாழ்.வருகையின் போது வலிகாமம் வடக்குப் பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டு பகுதியிலிருக்கும் காணிகள் விடுவிப்பு குறித்த அறிவிப்பை அவர் வெளியிடுவார் என மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் அவர் வருகை தராமை இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அனைத்து நலன்புரி நிலையங்களின் பொது நிர்வாகத் தலைவராகவுள்ள சி. அன்ரனிக் குயின் கருத்து வெளியிடுகையில்,
ஜனாதிபதி இன்று யாழ். வருகை தரவுள்ளதாகச் சொல்லப்பட்ட நிலையில் எமது முகாம் மக்கள் ஜனாதிபதி வருகிறார்….. எமது பகுதிகளை விடுவிக்கும் அறிவிப்பை வெளியிடுவார் என மிகவும் ஆரவாரத்துடன் எதிர்பார்த்திருந்தனர்.
ஜனாதிபதி இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தராமை எமது மக்களுக்கு ஏமாற்றத்தை அளிப்பதாகவுள்ளது. அவர் வருகை தராமை எமக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த வடக்கு மக்களுக்கும் ஏமாற்றத்தை அளிப்பதாகவுள்ளது.
தற்போதைய யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி பதவியேற்ற பின் எங்களையே முதன் முதலாக அழைத்து கலந்துரையாடினார். கலந்துரையாடிய பின் நான் பதவியேற்று நான்கு மாதங்களும் ஒரு பணியும் ஆற்றவில்லை.
உங்களுடைய சமூகம், கலாச்சாரம், நிலைப்பாடுகள் தொடர்பில் அறிந்து கொண்டதாகவும், அதன் பின்னர் தான் வேலைத் திட்டங்களை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அவர் எமது தமிழ் அரசியல்வாதிகளை விடவும் தமிழ்மக்களின் மனங்களை அறிந்து வைத்துள்ளார்.
விடுவிக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்படவுள்ள இடங்கள் தொடர்பில் தென்னிலங்கைக்கும், இங்கு நிலை கொண்டுள்ள இராணுவத்திற்கும் யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி அக்கறையுடன் எடுத்துச் சொல்லி வருகிறார்.
எங்களுடைய அரசியல் வாதிகளுக்குப் பெருவாரியான வாக்குகளை அளித்து அவர்களைப் பாராளுமன்றத்திற்கும், மாகாண சபை, பிரதேச சபைகள் என்பவற்றிற்கும் அனுப்பி விட்டு நாங்கள் ஏன் முகாம்களில் கஷ்டப்பட வேண்டும்? எங்கள் மக்களின் குறைகள் தீர்க்கப்படாமைக்கு எங்களுக்கு வாய்த்த அரசியல் வாதிகள் சரியில்லாமையே காரணம் எனவும் அவர் சுட்டிக் காட்டினார்.