ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஒருபோதும் கூட்டு எதிரணியுடன் இணையப்போவதில்லை. ஜனாதிபதியின் பலத்தை மக்கள் தேர்தலில் வெளிப்படுத்துவார்கள் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கூட்டு எதிரணியுடன் இணைந்து போட்டியிடவேண்டும் என்ற தேவை கட்சிக்குள் இருக்கும் ஒருசிலருக்கு இருக்கின்றது. அதனால்தான் கூட்டு எதிரணியுடன் தேர்தல் தொடர்பாக பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனர்.
ஆனால் கூட்டு எதிரணியின் நிபந்தனைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறசேன ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.
குறிப்பாக மஹிந்த ராஜபக்ஸவுக்கு பிரதமர் பதவி வழங்கப்படவேண்டும். அல்லது எதிர்க்; கட்சி பதவி வழங்கப்படவேண்டும். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, தலைவர் அரசாங்கத்தில் இருந்து வெளியேறவேண்டும் போன்ற நிபந்தனைகளை தெரிவித்திருந்தது. இந்த நிபந்தனைகளில் ஒன்றையேனும் நிறைவேற்றி ஜனாதிபதி ஒருபோதும் தனக்கு வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்யமாட்டார். அதனால் கூட்டு எதிரணியுடன் இடம்பெற்றுவந்த பேச்சுவார்த்தையை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நிறுத்திக்கொண்டுள்ளதாகவே தெரியவருகின்றது.
அத்துடன் தற்போது கூட்டு எதிரணியிலும் பிரச்சினை ஆரம்பித்துள்ளது. கூட்டு எதிரணியில் இருந்து பசில் ராஜபக்ஷவை நீக்கவேண்டும் என தினேஷ் குணவர்த்தன, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதனால்தான் பதுளையில் இடம்பெற்ற கூட்டு எதிரணியின் கூட்டத்துக்கு இவர்கள் வரவில்லை. இந்நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியையும் குழப்புவதற்கு இவர்கள் முயற்சித்தனர். ஆனால் கடவுளே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பாதுகாத்தனர்.
அதனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எந்த அச்சமுமின்றி தேர்தலுக்கு செல்லவேண்டும். அவரது பலம் மக்களுக்கு தெரியும். உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்கும் வரைக்கும் மக்கள் ஆதரவு இருக்கும் என்பதை ஜனாதிபதிக்கு தெரிவித்துக்கொள்கின்றோம். அத்துடன் அரசாங்கத்தின் கடந்த மூன்று வருடங்களில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் எவருக்கும் எதிராக ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்படவில்லை. அவ்வாறு தெரிவிக்கப்பட்டால் ஜனாதிபதி அவர்களை தொடர்ந்து அந்த பதவியில் வைக்கமாட்டார்.
என்றும் அஸாத் சாலி தெரிவித்தார். இந்த நிகழ்வில் கலாநிதி. விக்ரமபாகுவும் கலந்துகொண்டார்.