நாம் அன்றாடம் வாசிக்கும் செய்தி தாள்களை நாட்கள் செல்ல சமையலறையில் பயன்படுத்திவிடுகிறோம் அல்லது பழைய பேப்பர் கடைக்கு போட்டுவிடுகிறோம்.
ஆனால், ஜப்பானில் செய்திதாள்களை படித்து விட்டு மண்ணில் புதைத்து தண்ணீர் ஊற்றினால் செடி முளைக்குமாம்.
காகிதத்தில் புது வித தொழில்நுட்பத்தை மேற்கொண்டு அதில் வெற்றியும் கண்டிருக்கிறது தி மைனிச்சி (The mainichi) நாளிதழ்.
ஜப்பானில் பிரபல நாளிதழ்களில் ஒன்றான மைனிச்சி நிறுவனம், தனது செய்தித்தாள்களில் இருந்து செடிகள் வளரும் வகையிலான காகிதத்தை சென்ற ஆண்டு தயாரித்தது.
இந்தச் செய்தித்தாள்கள் மண்ணில் விழுந்த சில நாட்களில் அதில் இருந்து சிறிய தாவரங்கள் வளரத் துவங்கும். செய்தித்தாளை படித்து முடித்த பின்பு மண்ணில் போட்டு தண்ணீர் ஊற்றினால் போதும் சிறிய செடிகள் வளர்ந்து மலர்கள் பூத்துக்குலுங்க தொடங்கிவிடும்.
முழுவதும் மறு சுழற்சி செய்யப்பட்ட காகிதத்தால் தயாரிக்கப்படும் இந்த செய்தித்தாளில் மலர்ச்செடிகளின் விதைகள் உட்பட பல செடிகளின் விதைகள் புதிய தொழில்நுட்பம் மூலமாக கலந்து தயாரிக்கப்பட்டு பின்பு அச்சிற்கு செல்கிறது.
மைகளில் உள்ள ரசாயனங்களால் கூட செடிகளின் வளர்ச்சி தடைபடக்கூடாது என்பதற்காக முழுக்க முழுக்க காய்கறிகள் மற்றும் பழங்களில் இருந்து பெறப்பட்ட சாயங்களை கொண்டே செய்தித்தாள் அச்சிடப்படுகிறது
.காய்கறிகள் மற்றும் பழங்களின் சாறு சுற்றுச்சூழலையும் மாசு படுத்தாமலிருப்பதோடு மட்டுமின்றி செடிகள் வளர இயற்கை உரமாகவும் பயன்படுகின்றது இதனால் செடிகளும் செழித்து வளர்கின்றன.
இப்படி அச்சடிக்கப்பட்ட செய்தித்தாள் ஒரு நாளில் 4 மில்லியன் பிரதிகள் விற்றதோடு மட்டுமில்லாமல் $700,000 டொலர்கள் வருமானத்தையும் மைனிச்சி நிறுவனம் பெற்றது.