பல ஆண்டுகளுக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள முழு சூரிய கிரகணத்தை, அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் தொலைநோக்கிகள் மூலம் மக்கள் பார்வையிட்டுள்ளனர்.
இந்நிலையில், அடுத்த சூரிய கிரகணம் எதிர்வரும் 2019ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் திகதி ஏற்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் செல்லும்போது, சூரிய கிரகணம் ஏற்படுகின்றது. சூரியனை சந்திரன் மறைக்கும் தன்மைக்கு ஏற்ப, முழுமையாக மறைத்தால் முழுக் கிரகணம், பகுதியாக மறைத்தால் பகுதி கிரகணம், கங்கண கிரகணம், கலப்பு கிரகணம் எனப் பல வகையான பெயர்களில் அழைக்கப்படுகின்றது.
இந்த ஆண்டில், இதற்கு முன்னர் பெப்ரவரி 26ஆம் திகதி சூரிய கிரகணம் நிகழ்ந்தது. ஆனால், அன்று ஏற்பட்ட சூரிய கிரகணத்துக்கும், நேற்று ஏற்பட்ட சூரிய கிரகணத்துக்கும் பெரிய வேறுபாடு உள்ளது. பெப்ரவரி 26ஆம் ஏற்பட்ட சூரிய கிரகணத்தின்போது, சூரியனின் மையப்பகுதி மட்டும் நிலவால் மறைக்கப்பட்டது. ஆனால் தற்போதைய கிரகணத்தில், சூரியனை நிலவு முழுவதுமாக மறைக்கின்றது.
இந்தச் சூரிய கிரகணத்தை உலகம் முழுவதும் உள்ள 30 கோடி மக்களால் பார்க்க முடியும் நாசா தெரிவித்திருந்தது. மேலும் ஐரோப்பா, வட கிழக்கு ஆசியா, வடமேற்கு ஆபிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, பசுபிக், அட்லாண்திக் ஆகிய பகுதிகளிலும் சூரிய கிரகணம் தெரியும் என்று தெரிவிக்கப்பட்டிருந்து.
குறிப்பாக, அமெரிக்காவில் உள்ள 14 மாகாணங்களில் சூரிய கிரகணக் காட்சி முழுமையாகத் தெரிந்தது.