சுமந்திரனும் சம்பந்தனும் ஜனாதிபதியிடம் பேசியது என்ன? கசிந்தது செய்தி
காணாமற்போனோர் விவகாரம் முடிவுக்கு கொண்டு வரப்படவேண்டும். அவர்கள் உயிரோடு இருந்தால் விடுவிக்கவேண்டும். இல்லையென்றால் எப்படி இல்லாமல் போனார்கள்? அதற்கு பொறுப்பானவர்கள் யார்? என்பதை கூறவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், கூட்டமைப்பின் ஊடக பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டுப் பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,
அரசியல் கைதிகளில் வழக்கில்லாமல் இப்போது எவரும் இல்லை. 80 தொடக்கம் 90 பேர் வரை வழக்குகளோடு இருக்கின்றனர்.
அவர்களில் அரைவாசிப் பேர் நீதிமன்றினால் ஏற்கனவே தீர்ப்பு வழங்கப்பட்வர்கள். அவர்களை அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால் மட்டுமே பொதுமன்னிப்பு வழங்கி விடுவிக்க முடியும்.
அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. எஞ்சியோரின் வழக்குகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என அறிவித்தார்.
மக்களின் காணிகள் பாதுகாப்பு தரப்பினரிடமிருந்து மீளப் பெறப்பட்ட வேண்டும். அவை மக்களிடமே கையளிக்கப்படவேண்டும்.
இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரும் நானும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று முன்தினம் பேசியிருந்தோம். குறித்த செய்தி வெளியிடப்படாத நிலையில், சில ஊடகங்களிடம் கசிந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு ஜனாதிபதி இராணுவத்தளபதியுடன் உரையாடினார். விரைவில் முன்னேற்றம் கிடைக்கும் என தாம் நம்புவதாகவும் இதன்போது எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்தார்.