சுகாதார பாதுகாப்பு நிதி குறித்து விவாதிப்பதற்கு கனேடிய பிரதமர் நேரம் ஒதுக்க வேண்டும்
கனடாவின் மாகாண மற்றும் பிராந்திய தலைவர்கள் சுகாதார பாதுகாப்பு நிதி குறித்து நேரடியாக விவாதிப்பதற்கு கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ நேரம் ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். அத்துடன் மத்திய லிபரல் அரசு முன்னுரிமை அளிக்கும் காலநிலை மாற்றம் குறித்து பேசுவதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கனடாவின் பத்து மாகாணங்கள் மற்றும் மூன்று பிராந்தியங்களின் பிரதம மந்திரிகளை பிரிதிநிதித்துவப்படுத்தும் குழுவின் தலைவரும் யுகோன் மாகாண பிரதம மந்திரியுமான டரெல் பஸ்லோஸ்கி கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோவுக்கு எழுதியுள்ள கோரிக்கை கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில், மாகாண மற்றும் பிராந்திய தலைவர்களுடனான சந்திப்பு நிகழவில்லை எனின் மத்திய சுகாதார பராமரிப்பு கட்டண வருடாந்த அதிகரிப்பு திட்டங்களை லிபரல் அரசு ஒத்திவைக்க வேண்டி ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நீண்கால சுகாதார நிதி ஒதுக்கீடு குறித்து கலந்துரையாடுவதற்கு கடந்த ஜூலை மாதமும் கனேடிய பிரதமரிடம் கோரிக்கை விடுத்திருந்ததாகவும் அதற்கான எவ்வித பதிலும் தமக்கு கிடைக்கவில்லை எனவும் டரெல் பஸ்லோஸ்கி சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் 2017/18 நிதி ஆண்டிலிருந்து நிதியளிப்பு திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்படுவதாகவும் சுகாதார நிதி ஒதுக்கீடுகளுக்கு ஒரு பில்லியன் டொலர் செலவாகும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் கூட்டாட்சி வரவு செலவுத் திட்ட சுழற்சியாளது எதிர்வரும் வாரங்களில் ஆரம்பமாகிவிடும் என்ற நிலையில் இந்த மாற்றங்கள் கனேடியர்களை பாதிக்க முன்னர் அமைச்சர்கள் செயற்பட வேண்டியது முக்கியம் வாய்ந்தது எனவும் டரெல் பஸ்லோஸ்கி தெரிவித்துள்ளார்.