சிறுவர்கள் மத்தியில் கை, கால் மற்றும் வாய் நோய் (hand, foot and mouth disease (HFMD)) பரவி வருவதாக கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலை சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்த நோய்க்கான அறிகுறிகள் இருந்தால், பெற்றோர்கள் தங்கள் சிறுவர்களை பாடசாலைகள், சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் அல்லது பொது இடங்களுக்கு அனுப்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
மேலும், சிறுவர்களுக்கு தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் முகக் கவசங்களை அணிவிக்குமாறு பெற்றோர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தற்போதைய மழையுடனான வானிலை காரணமாக சிறுவர்கள் அழுவது அதிகரித்து வருவதாக வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.
விசேடமாக இந்த நோய் சிறுவர்களில் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு மிகவிரைவாக பரவுவதாக தெரிவித்துள்ளார்.
கைகள், கால்கள் வாயைச்சுற்றியும், வாய்குள்ளும் சிகப்பு நிற கொப்பளங்கள் காணக்கூடியதாக இருக்கும். மேலும், கொப்பளங்கள் ஒரு குழுவாகக் காணப்படும். இவை அரிப்பை ஏற்படுத்தாது.
இந்த வகை தொற்று நோய் பொதுவாக காக்ஸ்சாக்கி வைரஸால் பரவுகிறது. குறிப்பாக கொப்புளங்களுக்குள் இருக்கும் திரவம், தும்மல், இருமல் ஆகியவற்றால் பரவுகிறது. நோய் தொற்றுக்குள்ளாகி குணமடைந்து சில வாரங்களுக்குப் பிறகு இந்த வைரஸ் அவர்களின் மலத்திலும் காணப்படும்.
மேலும், கொவிட், டெங்கு காய்ச்சல், இருமல், மூக்கு ஒழுகுதல், தும்மல் மற்றும் தொண்டை வலி உள்ளிட்ட தொற்று அறிகுறிகள் மற்றும் பல வைரஸ் தொற்றுகள் இந்த நாட்களில் சிறுவர்களிடையே பரவுவதாக தெரிவித்துள்ளார்.