சிறுமியின் உயிரை பறித்த அதிவேகம்: இளம்பெண் ஓட்டுனர் அதிரடி கைது
கனடா நாட்டில் நிகழ்ந்த சாலை விபத்தில் சிறுமி ஒருவர் பலியானது தொடர்பாக பெண் ஓட்டுனர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரொறொன்ரோ நகருக்கு அருகில் உள்ள Markham பகுதியில் தான் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.
நேற்று அதிகாலை 3.10 மணியளவில் தோழிகள் நால்வர் ரோஞ் ரோவர் சொகுசு காரில் பயணம் செய்துள்ளனர்.
காரை 22 வயதான இளம்பெண் ஒருவர் ஓட்டியுள்ளார். அதிகாலை நேரம் என்பதால் சாலை முழுவதும் பனிப்படலம் சூழ்ந்து காணப்பட்டுள்ளது.
இந்நிலையில், 14th Avenue பகுதிக்கு கார் வந்த போது அங்குள்ள வளைவு ஒன்றில் திரும்ப முயற்சி செய்துள்ளது. ஆனால், கார் அதிவேகத்தில் வந்ததால் வளைவில் திரும்ப முடியாமல் எதிரே இருந்த குட்டிச்சுவர் மீது மோதி பலமுறை உருண்டுச் சென்றுள்ளது.
இவ்விபத்தில் 17 வயதான சிறுமி ஒருவர் காரில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்டார். அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
விபத்து குறித்து தகவல் அறிந்த பொலிசார் காரில் சிக்கியிருந்த 3 தோழிகளை வெளியே மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 22 வயதான பெண் ஓட்டுனரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
எனினும், அவர் மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெறவும் அனுமதித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து பொலிசார் பேசிய போது, சாலையில் அதிவேகமாக கார் ஓட்டியதே விபத்து ஏற்படக் காரணம் எனவும், தற்போது பெண் ஓட்டுனரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.