சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிராக பிரேசிலில் தொடரப்பட்டுள்ள வழக்கு, மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுக்கக் கூடும் என்று ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப் எச்சரித்துள்ளார்.
சிறிலங்காவுக்கான 14 நாட்கள் பயணத்தை மேற்கொண்டிருந்த, உண்மையை ஊக்குவித்தல், நீதி, இழப்பீடு, மற்றும் மீள நிகழாமையை உத்தரவாதப்படுத்தலுக்கான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப் தமது பயணத்தின் முடிவில் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
கொழும்பில் உள்ள ஐ.நா பணியகத்தில் இன்று -23- பிற்பகல் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
“ஜெனரல் ஜயசூரிய எதிர்கொண்டுள்ளது போன்ற குற்றச்சாட்டுகளை சிறிலங்கா விசாரிக்க வேண்டும் அல்லது அதற்காக அதிக விலை கொடுக்க நேரிடும்.
பொறுப்புக்கூறல் உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ கோரப்படும்.
போருடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பாக, நம்பகமான பொறுப்புக்கூறல் இடம்பெறுவதை சிறிலங்கா உறுதிப்படுத்த வேண்டும்.
சிறிலங்காவில் நிலைமாறுகால நீதி செயற்பாடுகள் அரசியல்மயப்படுத்தப்பட்டிருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.
விரிவான நிலைமாறுகால நீதி திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் தாமதம், பல்வேறு மட்டங்களிலும் கேள்விகளை எழுப்பியுள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.