சிம்பு, ஸ்ரேயா, தமன்னா மற்றும் பலர் நடித்து வெளிவந்த ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படம் மோசமான படமாக அமைந்து பெரும் தோல்வியைத் தழுவியது. அந்தப் படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், மற்றும் இயக்குனர் இருவரும் சில வாரங்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களைச் சந்தித்து அவர்களது சோகத்தைப் பகிர்ந்து கொண்டனர்.
வினியோகஸ்தராகவும் உள்ள தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், நாளை நடைபெற உள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட வினியோகர் சங்கத் தேர்தலில் செயற்குழு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுகிறார். அது தொடர்பாக இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் மைக்கேல் ராயப்பன் பேசினார்.
“வினியோகஸ்தர்கள் சங்கத் தேர்தலில் எங்களை எதிர்த்துப் போட்டியிடும் அருள்பதிக்கு ஆதரவாக நேற்று சில தயாரிப்பாளர்கள் பேசினார்கள். அப்போது பேசிய டி.ராஜேந்தர், அவருடைய மகன் சிம்புவுக்கு நடிக்க மட்டும் கற்றுக் கொடுக்கவில்லை, இசையமைக்க, பாடல் எழுத, நடனமாட, இயக்க ஆகியவற்றையும் கற்றுக் கொடுத்ததாகச் சொல்லியிருக்கிறார். அது போலத்தான் குறித்த நேரத்தில் படப்பிடிப்புக்கு வராமல் இருப்பதையும் சிம்புவுக்கு கற்றுக் கொடுத்துள்ளார் போலிருக்கிறது. அதனால் தான் படப்பிடிப்புக்கு ஒழுங்காக வராமல் தயாரிப்பாளர்களை தவிக்க விடுகிறார் என நினைக்கிறேன்,” என்றார்.
சிம்பு இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ள ‘சக்க போடு போடு ராஜா’ படம் நேற்று வெளியானது. படத்தில் ஒரு பாடல் கூட நன்றாக இல்லை என்பதுதான் ரசிகர்களின் கருத்தாக உள்ளது.