பொதுவாக சினிமா நடிகர்கள் தங்கள் வாரிசுகளையும் நடிகர்களாக களம் இறக்குவார்கள். அதில் சிலர் வெற்றி பெறுகிறார்கள். சிலர் தோற்று ஒதுங்கி விடுகிறார்கள். வாரிசுகளை அறிமுகப்படுத்தாத நடிகர்கள் அபூர்வம். அவர்களில் ஒருவர் சோபன் பாபு. தெலுங்கு சினிமாவில் 30 வருடங்களுக்கு மேலாக முன்னணி நடிகராக இருந்தவர். ஆனால் தன் வாரிசுகளை சினிமாவில் அனுமதிக்கவில்லை. அவர்கள் தற்போது தொழில்துறையில் சிறந்து விளங்குகிறார்கள்.
சோபன் பாபுவின் இயற்பெயர் உப்பு சோபன சலபதிராவ். 1937 ஆம் ஆண்டு ஜனவரி 14ந் தேதி அவர் பிறந்தார். தெய்வ பலம் எனும் படத்தின் மூலம் அவர் தெலுங்கு திரைப்பட உலகில் அடியெடுத்து வைத்தார். எனினும் பக்த சபரி எனும் திரைப்படமே முதலில் வெளியானது. 1965 ஆம் ஆண்டு வீர அபிமன்யு படத்தில் முதன் முறையாக கதாநாயகனாக நடித்தார். பின்னர் மனுசுலு மாரலி எனும் படத்தில் அவர் கதாநாயகனாக நடிக்க அந்த படம் பெறும் வெற்றி பெற்று அவரை முன்னணி நாயகனாக்கியது.
சோபன் பாபு மிகவும் நேர்த்தியாக உடை அணிந்து அழகாக தோன்றக் கூடியவர். ஆந்திர திரைப்பட உலகிலேயே மிகவும் அழகான நடிகர் என்று அவர் பாராட்டப்பட்டார். அவர் எந்தவிதமான உடை அணிந்து வந்தாலும் அவருக்கு பொருத்தமாக இருக்கும். பல்வேறு விதமான பாத்திரங்களை ஏற்று நடித்த அவர் மிகவும் ஸ்டைலாக நடித்து ரசிகர்களின் அபிமானத்தை பெற்றார்.
பிலிம்பேர் விருதுகளை 4 முறை வென்றுள்ள அவர் ஆந்திர மாநில அரசின் நந்தி விருதுகளை 5 முறை வென்றிருக்கிறார். மொத்தம் 250 படங்களுக்கு மேல் அவர் நடித்துள்ளார். ஒரு சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.