முன்னாள பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவின் பெயர் இப்போது ஊடகங்களில் அதிகளவில் அடிபடத் தொடங்கியிருக்கிறது.
ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களை நடத்தும் மரணப்படை ஒன்றை கோத்தபாய ராஜபக்ச தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அளித்திருந்த வாக்குமூலம் நீதிமன்றத்தில் வெளியானது மாத்திரம், அவரது பெயர் இப்போது ஊடகங்களில் அதிகளவில் அடிபடுவதற்கு காரணமல்ல.
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்சவை நிறுத்தப் போவதாக கூட்டு எதிரணியின் முக்கியஸ்தர்கள் வெளிப்படையாகப் பேசத் தொடங்கியுள்ளதும் கூட கோத்தபாய ராஜபக்சவின் பெயர் ஊடகங்களில் அடிபடக் காரணமாகவுள்ளது.
சரத் பொன்சேகாவின் வாக்குமூலம் நீதிமன்றத்தில் வெளியிடப்பட்டதை அடுத்து கோத்தபாய ராஜபக்ச மரணப்படை ஒன்றை இயக்கினார் என்ற செய்தி சர்வதேச அளவில் ஊடகங்களில் முக்கியத்துவம் பெற்றிருந்தது.
இதனால் தன் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரிக்கும் வகையில் கடந்த வாரம் வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களை கொழும்பில் உள்ள விடுதியொன்றில் சந்தித்திருந்தார் கோத்தபாய ராஜபக்ச.
தனது சிஙகப்பூர் பயணத்துக்கு முன்னதாக தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கும் செய்திகள் சர்வதேச மட்டத்துக்குச் செல்வதை அவர் விரும்பியிருந்தார்.
இந்தச் சந்திப்பின் போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் ஏற்கனவே அவர் ஊடகப் பேட்டிகளில் கூறி வரும் குழப்பமான கருத்துக்களைத் தான் பிரதிபலித்திருந்தது.
அரசியலுக்கு வருவாரா? அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவாரா? என்பன போன்ற கேள்விகள் தான் அங்கும் எழுப்பப்பட்டிருந்தன. காரணம் வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கத்தில் அங்கம் வகிக்கும் ஊடகவியலாளர்களில் பலர் உள்நாட்டவர்கள் தான்.
இதற்கு கோத்தபாய ராஜபக்ச வரலாம், வராமலும் போகலாம் என்பது போன்றே பட்டும் படாமலும் பதில் கொடுத்திருக்கிறார்.
அரசியலில் இறங்குவது பற்றி இதுவரை முடிவு செய்யவில்லை. ஆனால் மக்களுக்கு சேவையாற்றும் விருப்பம் உள்ளது. அரசியலில் இறங்கினால் அதனை திறமையாக சேய்வேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால் முன்னாள் ஜனாதிபதி எனக்கு அரசியல் தெரியாது என்று அடிக்கடி கூறுவார் என்றெல்லாம் அவர் கூறியிருக்கிறார்.
ஏற்கனவே கூட்டு எதிரணியினருக்கு மஹிந்தவை இனிமேல் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்துவதற்கு கோத்தபாய ராஜபக்சவை விட வேறு பொருத்தமான யாரும் தமது அணியில் இல்லை என்று வெட்கம் இல்லாமல் வெளிப்படையாகவே அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
அரசியலமைப்பு மாற்றம் நிகழாது போனால் மீண்டும் 2020ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டால் கூட்டு எதிரணியின் வேட்பாளராக கோத்தபாய ராஜபக்சவையே முன்னிறுத்த உச்சக்கட்ட முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கோ, மீண்டும் மைத்திரிபால சிறிசேனவை விட்டால் வேறு வழியில்லை. ஐதேக நிறுத்தக்கூடிய வேட்பாளரையும் ஆதரிக்க முடியாது. அதைவிட கட்சிக்குள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தலைவரும் யாரும் இல்லை.
மைத்திரிபால சிறிசேனவை மீண்டும் போட்டியில் நிறுத்தினால் ஐதேகவும் அவரை ஆதரிக்கும். எனவே அவரை நிறுத்தியே கோத்தபாய ராஜபக்சவை தோற்கடிக்கலாம் என்று இப்போதே கணக்குப் போட்டு நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
மைத்திரிபால சிறிசேன தாம் 2வது முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று கூறியே போட்டியில் இறங்கியவர். அவர் மீண்டும் போட்டியில் இறங்கினால் அவரது பெயரைப் பாதிக்கும் என்பதைக் கூட உணர்ந்து கொள்ளாமல் அவரை வைத்து அவரது கட்சியினர் சூதாட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு பக்கத்தில் கோத்தபாய ராஜபக்சவை விட்டால் வேறு யாரும் மஹிந்த அணிக்கு இல்லை, இன்னொரு பக்கத்தில் மைத்திரிபால சிறிசேனவை விட்டால் சுதந்திரக் கட்சியினருக்கு மாத்திரமன்றி, ஐதேகவினருக்கும் கூட வேறு ஆள் இல்லை.
எனவே இந்த இரண்டு பேரையும் எப்படியாவது அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மோத விடுவதற்கே முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.
இந்தக் கட்டத்தில் தான் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பச்சைக்கொடி காண்பித்திருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த ஆட்சியில் இடம்பெற்ற பல்வேறு ஊழல்கள் மோசடிகள் குற்றச்செயல்கள் தொடர்பாக முன்னைய அரசின் முக்கிய பிரமுகர்கள் பலரும் கைது செய்யப்பட்டு சிறைக்கூண்டுகளைப் பார்த்து விட்டுத் திரும்பியிருக்கின்றனர்.
மஹிந்த ராஜபக்சவின் மகன்களான நாமல், யோஷித, சகோதரரான பஷில் ராஜபக்ச, மைத்துனரான ஜாலிய விக்ரமசூரிய போன்றவர்களும் அவரது அரசியல் சகாக்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்களும் இவ்வாறு சிறைக்கூண்டுகளைப் பார்த்து விட்டனர்.
ஆனாலும் குற்றச்சாட்டுகள் பலவற்றை எதிர்கொண்டுள்ள போதிலும் மஹிந்த ராஜபக்சவோ, கோத்தபாய ராஜபக்சவோ இன்னமும் கைது செய்யப்படவில்லை.
இவர்கள் புலிகளை அழித்தவர்கள், போரை வென்று கொடுத்தவர்கள் என்ற ஒரு மதிப்பு மிக்க அடையாளம் சிங்கள மக்கள் மத்தியில் இருக்கிறது.
இவர்களைக் கைது செய்தால் சிங்கள மக்கள் மத்தியில் அரசாங்கம் மீது வெறுப்பு ஏற்படும் என்பதாலும் இதனைச் சாட்டாக வைத்து மஹிந்த அணியினர் அரசுக்கு எதிரான போராட்டங்களை நடத்தலாம் என்பதாலும் தான் இதுவரையில் மஹிந்தவையோ, கோத்தபாய ராஜபக்சவையோ கைது செய்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கவில்லை.
ஆனால் தற்போதுள்ள நிலையில் லசந்த விக்ரமதுங்க கொலை, ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவங்களில் கோத்தபாய ராஜபக்ச தொடர்புபட்டிருந்தார் என்றும் அவர் ஒரு மரணப்படையை இயக்கினார் என்றும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
சரத் பொன்சேகா சுமத்தியுள்ள இந்தக் குற்றச்சாட்டு எந்தளவுக்கு உண்மையானது என்பதை நீதிமன்ற விசாரணைகளும் அதனைச் சார்ந்து முன்னெடுக்கப்படும் புலனாய்வுத் தேடல்களும் தான் முடிவு செய்யும்.
ஆனாலும் கடந்த வாரம் குருநாகலில் நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புலிகளுக்கு எதிராகப் போரிட்ட படையினரை குற்றச்சாட்டுகளில் இருந்து தாம் பாதுகாப்பேன் என்றும் ஆனால் விளையாட்டு வீரர்களையும் ஊடகவியலாளர்களையும் படுகொலை செய்தவர்களை பாதுகாக்க முடியாது என்றும் கூறியிருந்தார்.
இது கோத்தபாய ராஜபக்ச மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கும் இராணுவப் பலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரிகளை குறிவைத்து வெளியிடப்பட்ட கருத்தாகவே பார்க்கப்படுகிறது.
இவர்களைக் கைது செய்வதற்கான ஒப்புதலை ஜனாதிபதி கொடுத்திருக்கலாம் அல்லது கொடுப்பதற்கு முடிவு செய்திருக்கலாம் என்றே கருதப்படுகிறது.
இப்போது கூட அரசாங்கம் வடக்கில் நடந்த மீறல்களுக்காக முன்னைய அரசாங்கத்தில் இருந்தவர்கள், முன்னாள் இராணுவ அதிகாரிகளைக் கைது செய்யும் என்று எதிர்பார்க்க முடியாது. தெற்கில் நடந்த படுகொலைகளுக்காகவே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம்.
இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படும் போது போரை வென்றவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள் என்று குற்றம் சாட்ட முடியாது.
தெற்கில் நடந்த படுகொலைகள் அல்லது மனித உரிமை மீறல்களுக்காக கோத்தபாய ராஜபக்ச கூட கைது செய்யப்படலாம். அவரைக் கைது செய்வதற்கு அரசாங்கம் தற்போது விரும்புவதாகவே தெரிகிறது.
இதன் மூலம் அவரது அல்லது அவரை வைத்து தமது அரசியல் எதிர்காலத்தை வலுப்படுத்திக் கொள்ள விரும்பும் தரப்புகளின் கனவை சூனியமாக்கலாம் என்று அரசாங்கம் நினைக்கக் கூடும்.
எவ்வாறாயினும் சரத் பொன்சேகாவின் சாட்சியம் மாத்திரம் கோத்தபாய ராஜபக்சவை குற்றவாளியாக தீர்மானித்து விடாது. அதுபோலவே கோத்தபாய ராஜபக்ச தன் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளதால் மாத்திரம் அவர் சுற்றவாளி என்று முடிவு செய்து விடவும் முடியாது.
குற்றங்களை நிரூபிக்கும் வலுவான ஆதாரங்கள் இல்லாமல் கோத்தபாய ராஜபக்சவைக் கைது செய்ய அரசாங்கம் முனைந்தால் அது அவரது அரசியல் எதிர்காலத்தையே பலப்படுத்தும்.
கோத்தபாய ராஜபக்சவைக் கைது செய்வதா இல்லையா என்பதை விட மாற்று அரசியல் எழுச்சி ஒன்றுக்கான வாய்ப்பாக அவர் மாறுவதை தடுப்பது தான் தற்போதைய அரசின் பிரதான நோக்கமாக இருக்கிறது.
அந்தவகையில் சிந்தித்தால் போதிய ஆதாரங்களின்றி கோத்தபாய ராஜபக்சவின் மீத அரசாங்கம் கைவைக்க முனையாது.
எவ்வாறாயினும் தேவையான ஆதாரங்களுடன் அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டால் நிச்சயம் இந்தக் கிடுக்கிப்பிடியில் இருந்து அவரால் தப்பிக்க முடியாமல் போகும்.