மத்திய வங்கி பிணை முறி அறிக்கை தொடர்பாக நான் விடுத்த சவாலையடுத்து, அது அவசர அவசரமாக பாராளுமன்றத்தில் விவாதிக்க எடுத்துள்ள போதிலும், அந்த குறுகிய கால விவாதத்தின் மூலம் நாட்டு மக்கள் எவ்வளவு தூரம் அதனை விளங்கிக் கொள்வர் என்பது சந்தேகமாகவே உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஊழல் மோசடியான நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்காக நாட்டின் மீது உண்மையான அன்பு கொண்டவர்களும் வெளிப்படைத்தன்மையுடன் செயற்படக் கூடியவர்களும் கட்சி அரசியல் பேதங்களுக்கு அப்பால் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் அவசியத் தேவை என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் போது அவர்கள் என்னை விமர்சிப்பதோடு, அதிதிகள் கூட்டணியை அமைத்து செயற்படவும் தொடங்கி விட்டனர் என்றும் குறிப்பிட்டார்.
தேசியப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்கு நான் அர்ப்பணிப்போடு உள்ளேன். அதற்கு எல்லா தரப்பினரும் இதய சுத்தியோடு முழுமையாக ஒத்துழைப்பது அவசியம் என்றும் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.