சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து கடந்த 2008-ம் ஆண்டு ஓய்வுபெற்றது ஏன் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி முதன்முறையாக மனம் திறந்துள்ளார்.
இந்தியக் கிரிக்கெட் அணியை உலகின் முன்னணி அணிகளுள் ஒன்றாக மாற்றியவர்களுள் முக்கியமானவராகக் கருதப்படுபவர் சவுரவ் கங்குலி. கடந்த 1995-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக தொடர்ச்சியாக போட்டிகளில் பங்கேற்று வந்த கங்குலி, கடந்த 2008-ம் ஆண்டு நாக்பூரில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடை பெற்றார்.
கங்குலியின் கிரிக்கெட் கேரியர் 2005-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை அவ்வளவு உவப்பானதாக இருக்கவில்லை. அதிலும் குறிப்பாக இந்திய அணியின் அப்போதைய பயிற்சியாளராக இருந்த கிரேக் சேப்பலுக்கும் கங்குலிக்கும் இடையில் ஏற்பட்ட பல்வேறு மனக்கசப்புகள் இந்திய கிரிக்கெட்டில் பல ஆண்டுகளாக பேசுபொருளாக இருந்து வருபவை. கேப்டன் பொறுப்பிலிருந்து கடந்த 2005-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் கங்குலி நீக்கப்பட்டார். பயிற்சியாளர் சேப்பலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடே கங்குலி பதவிப்பறிப்பின் பின்னணி என்று அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
பின்னர் 2006-ம் ஆண்டு ஜனவரியில் அணியிலிருந்து கங்குலி கழற்றிவிடப்பட்டார். அந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் மீண்டும் இடம்பெற்ற கங்குலி, அந்த போட்டியில் 51 ரன்கள் எடுத்தார். அதன்பின்னர் 2008-ல் ஓய்வுபெறும் முன்பாக 3 சதங்கள் மற்றும் பெங்களூருவில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கெதிராக இரட்டை சதம் (239) என கங்குலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்தநிலையில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றது ஏன் என்று கங்குலி முதன்முறையாக மனம்திறந்துள்ளார். கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மனைவியுடன் கலந்துகொண்ட கங்குலில் பேசும்போது, ‘உலக அளவில் விளையாட்டு வீரர்களை எடுத்துக் கொண்டால், கேரியரின் இறுதிக் காலத்தில் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தியுள்ளனர். தியாகோ மாராடோனா முதல் இதற்கு உதாரணங்கள் பலவற்றைக் கூறலாம். கிரிக்கெட் போட்டிகளிலிருந்து 2011-ல் ஓய்வுபெற்ற டிராவிட், அந்த ஆண்டில் மட்டுமே 3 அல்லது 4 சதங்களை விளாசினார். விளையாட்டைப் பொறுத்தவரை மற்றொருவருக்கு நீங்கள் வாய்ப்பளிக்க வேண்டிய சூழல் வரும்.
கிரேக் சேப்பல் உடனான அந்த நிகழ்வு எனது கண்ணைத் திறந்த நிகழ்வு என்று கூறலாம். 1995 முதல் 2006 வரை எனது கேரியர் கிராப் மேல்நோக்கியே சென்றது. அந்த காலகட்டத்தில் ஒருதொடரைக் கூட நான் மிஸ் செய்தது கிடையாது. அதில், கேப்டனாக 6 ஆண்டுகள் மட்டுமே நான் பதவி வகித்தேன். 2006-ம் ஆண்டுக்கு முன்புவரை உலகமே எனது காலடியில் இருந்தது. ஒரு காலத்தில் அணியில் இடம் கிடைக்காதா என்ற சூழல் ஏற்பட்டது. அணியில் இடம் கிடைத்து விடாதா என்று காத்திருந்தது போதும் என தோன்றியதால் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விடைபெறலாம் என்ற முடிவுக்கு வந்தேன்’ என்றார்.